தேமுதிக கவுன்சிலரின் கணவர் வெட்டிப் படுகொலை
விருத்தாச்சலம்: கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள மங்கலம்பேட்டை பேரூராட்சி தேமுதிக கவுன்சிலர் கஸ்தூரியின் கணவர் ஜெயராமன் அடையாளம் தெரியாத சிலரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு ஏரிக் கரையில் பிணம் வீசப்பட்டது.
மங்கலம்பேட்டையைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி கஸ்தூரி. இவர் மங்கலம்பேட்டை பேரூராட்சிக்கு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் தேமுதிகவில் சேர்ந்தார்.
வேலை விஷயமாக 2 நாட்களுக்கு முன்பு ஜெயராமன் சென்னை சென்றார். பின்னர் நேற்று அதிகாலை ஊர் திரும்பினார். அப்போது அவருக்கு செல்போனில் அழைப்பு வந்தது. போனில் பேசிய ஜெயராமன், சிறிது நேரத்தில் வருவதாக கூறி விட்டு ஊரில் உள்ள ஏரிக்குச் சென்றார்.
ஆனால் அவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை. இந்த நிலையில் ஆட்டோவில் வந்த ஒரு நபர் ஜெயராமன் செல்போனை வாங்கி வரச் சொன்னதாக கூறி செல்போனை கேட்டு வாங்கிச் சென்றார்.
சிறிது நேரத்தில் ஜெயராமன் ஏரிக்கரையில் பிணமாகக் கிடப்பதாக சிலர் வந்து கஸ்தூரியிடம் தகவல் சொன்னார்கள். அலறி அடித்துக் கொண்டு ஓடிய கஸ்தூரி கணவரின் பிணத்தைப் பார்த்துக் கதறி அழுதார்.
தகவல் தெரிந்ததும் போலீஸார் விரைந்து வந்து உடலை மீட்டு வழக்குப் பதிவு செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா அல்லது தனிப்பட்ட காரணத்திற்காக நடந்ததா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications