கலீதா ஜியா கைது-ஹசீனா மீதும் ஊழல் வழக்கு
டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவையும் அவரது இளைய மகன் அராபத் ரஹ்மான் கொகொவையும் அந் நாட்டு இன்று காலை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆட்சியில் இருந்தபோது அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
டாக்காவின் கன்டோன்மண்ட் பகுதியில் உள்ள கலீதாவின் வீட்டில் வைத்து இந்த கைதுகள் அரங்கேற்றப்பட்டன. கைதான இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த கலீதா, தனது மகன் நடத்திய நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக உதவிகள் செய்ததாகவும், சிட்டகாங் துறைமுகத்துக்கு வேலைக்கு ஆள் சேர்த்ததில் ஊழல் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே இன்னொரு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது ரூ. 3 கோடி ஊழல் செய்ததாக வங்கநாட்டு ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.
வங்கதேசத்தில் மின் தயாரிப்பு நிலையங்களை அமைக்க வந்த இரு தனியார் நிறுவனங்களிடமிருந்து ரூ. 3 கோடியை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு ஹசீனா உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஹசீனா தவிர அவரது ஆட்சியில் பணியாற்றிய 6 அதிகாரிகள் மீதும் ஊழல் வழக்குகள் பாய்ந்துள்ளன.
இதனால் ஹசீனா உள்பட இவர்களும் விரைவில் கைதாவார்கள் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications