அணு ஒப்பந்தம்: விவாதிக்க பிரணாப், காரத் தலைமையில் 2 குழுக்கள்!
டெல்லி: இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஆராய மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் 8 பேர் கொண்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் குழுவும், 6 பேர் கொண்ட இடதுசாரிகள் குழுவும் அமைக்கப்படவுள்ளது.
இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை இடதுசாரிக் கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இதையடுத்து ஒப்பந்தத்தின் அம்சங்கள் குறித்து விவாதிக்க குழு அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. இதை இடதுசாரிகளும் ஏற்றுக் கொண்டனர்.
இதையடுத்து வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி குழு அமைக்கப்படுகிறது.
இந்தக் குழுவில் அமைச்சர்கள் ஏ.கே.அந்தோணி, கபில் சிபல், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 8 பேர் இடம் பெறுகிறார்கள். திமுக சார்பில் டி.ஆர்.பாலு இடம் பெறுவார் எனத் தெரிகிறது.
இதேபோல பிரகாஷ் காரத் தலைமையில் ஏ.பி.பரதன், டி.ராஜா, சீதாராம் எச்சூரி உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.
இரு குழுக்களும் கூட அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஆலோசிப்பார்கள். அதன் அடிப்படையில், அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவு தருவது குறித்து இடதுசாரிகள் முடிவு செய்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications