மோதிரத்தைப் பிடுங்கிக் கொண்டு லஞ்சம்br/கேட்ட இன்ஸ்பெக்டர், ஏட்டு கைது
மதுரை:
சூதாட்டத்தில் ஈடுபட்டு கைதானவரிடம் மோதிரத்தைப் பிடுங்கி வைத்துக் கொண்டு அதைத் திருப்பித் தர வேண்டுமானால் பணம் தர வேண்டும் என்று கூறி மிரட்டிய இன்ஸ்பெக்டர் மற்றும் தலைமைக் காவலரை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கைது செய்தனர்.
மதுரை, இஸ்மாயில்புரம் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 9 பேரை கடந்த வாரம் தெப்பக்குளம் இன்ஸ்பெக்டர் தேவராஜன் கைது செய்தார். அப்போது அவர்களிடம் இருந்து பணம், செல்போன்கள் மற்றும் தங்க மோதிரங்களை தேவராஜன் பறித்துக்கொண்டு அவர்களின் மீது வழக்கு போட்டுள்ளார்.
பின்னர் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அப்போது அவர்களின் பொருட்கள் திருப்பித் தரப்பட்டுள்ளன. ஆனால் கண்ணன் என்பவரின் தங்க மோதிரத்தை மட்டும் இன்ஸ்பெக்டர் தரவில்லை.
இதையடுத்து தனது மோதிரத்தை பெறுவதற்காக காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார் கண்ணன். ஆனால், 1000 ரூபாய் பணத்தைக் கொடுத்து விட்டு மோதிரத்தை வாங்கிச் செல் என்று இன்ஸ்பெக்டர் தேவராஜனும், தலைமைக் காவலர் பொன்னுச்சாமியும் கூறியுள்ளனர்.
இதையடுத்து கண்ணன், லஞ்ச ஒழிப்புப் போலீஸில் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு எஸ்.பி. குலோத்துங்க பாண்டியன், கண்ணனிடம் ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுக்களை கொடுத்து அதை இன்ஸ்பெக்டரிடம் தருமாறு கூறினார்.
அதன்படி கண்ணன் தெப்பக்குளம் காவல் நிலையத்துக்கு சென்று இன்ஸ்பெக்டர் தேவராஜனிடம் பணத்தை கொடுத்தார். அவர் அந்த பணத்தை ஏட்டு பொன்னுச்சாமியிடம் கொடுக்கச் சொன்னார்.
அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், இன்ஸ்பெக்டரையும், ஏட்டையும் கையும் களவுமாக பிடித்துக் கைது செய்தனர்.
பின்னர் நீதிபதியின் வீட்டிற்கு அழைத்துச் சென்று ஆஜர்படுத்தினர். அதன் பின்னர் இருவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
இன்ஸ்பெக்டர் தேவராஜன் சமீபத்தில்தான் பதவி உயர்வு பெற்றாராம். பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஒரு வருடம்தான் உள்ளது. இந்த நிலையில், லஞ்ச வழக்கில் சிக்கி கைதாகியுள்ளார்.












Click it and Unblock the Notifications