பூச்சாண்டி காட்டும் கருணாநிதி: ஜெ. தாக்கு
சென்னை:
மக்கள் பிரச்சினைக்காக போராடும் என் மீது வழக்குப் போடப் போவதாக பூச்சாண்டி காட்டுகிறார், அதிமுக மிரட்டுகிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

முதல்வர் கருணாநிதி என்னை பயமுறுத்துவதாக நினைத்துக் கொண்டு ஒரு மிரட்டல் விடுத்திருக்கிறார். பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவரான என்னைப் பார்த்து, அறிக்கைகள், ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் போன்றவற்றை நடத்தினால் கிரிமினல் வழக்கை சந்திக்க வேண்டியிருக்கும் என்று கேள்வியும் நானே, பதிலும் நானே என்பதன் மூலம் எனக்கு பூச்சாண்டி காட்டுகிறார்.
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்திய விடுதலைக்காக மக்கள் நடத்திய போராட்டங்களை பற்றியோ, அதனை அடக்குவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் கொண்டு வந்த ஆள் தூக்கி வாய்ப்பூட்டுச் சட்டமாகிய ரெளலட் சட்டம் பற்றியோ, அந்தச் சட்டம் அடைந்த அதோ கதியைப் பற்றியோ தெரிந்து கொள்ளாமல் இவ்வாறு மிரட்டி இருக்கிறார்.
அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் கூட இப்படித்தான் இந்திய விடுதலைக்காக போராடிய தலைவர்களை வாயை திறக்காதே எதையும் பேசாதே என்றும், பேசினால் சிறை என்றும் மிரட்டிப் பார்த்தது. முடிவில் அந்த பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவை விட்டே ஓடிவிட்டது.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் பேச்சுரிமை, சிந்தனையை வெளிப்படுத்தும் உரிமை, நல்ல நோக்கத்திற்காக ஓர் இடத்தில் மக்கள் கூடுவது, போராட்டங்களை மேற்கொள்வது ஆகியவை எல்லாம் ஜீவாதார உரிமைகளாக, அடிப்படை உரிமைகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
மக்களுடைய தேவைகளுக்காக போராடுவது, மக்களின் தேவைகளை முன்னிறுத்தி எதிர்கட்சியினர் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவது எந்த விதத்திலும் கிரிமினல் குற்றம் ஆகாது.
அன்றாடம் கிரிமினல் குற்றங்களை செய்து கொண்டிருக்கிற இவரது கட்சிக்காரர்களைக் காட்டிலும், அதிமுக தொண்டர்கள் எந்தத் தவறான செயலையும் செய்து விடவில்லை.
ஜனநாயக முறையில் மக்கள் நலப் பிரச்சினைகளை முன்னிறுத்தி போராட்டங்கள் நடத்தும் அதிமுக உடன்பிறப்புகள் மீது காவல் துறையை ஏவி விட்டு அச்சுறுத்துதல், பொய் வழக்கு போடுதல் ஆகியவற்றை நடத்திக் கொண்டிருக்கிற இவருடைய கட்சியினர் போல் எந்தக் குற்றத்தையும் அதிமுக செய்து விடவில்லை.
தமிழ்நாடு முழுவதிலும் அதிமுக நிர்வாகிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் குறித்து எனக்குக் கொடுக்கின்ற தகவல்களின் அடிப்படையில் தான் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.
அவ்வாறு நடத்தப்படும் போராட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வருவதை தாங்கிக் கொள்ள முடியாத கருணாநிதி ஆத்திரத்தில் என்னை மிரட்டுகிறார்.
மக்களைப் பற்றி சிந்திக்கவும், அவர்கள் நலன்களுக்காக போராடுவதற்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முழு உரிமை எனக்கு இருக்கின்றது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்சனைகளுக்காகத் தான் நான் எனது நேரத்தைச் செலவிடுகிறேன். ஆனால், இன்றைய திமுக அரசின் முதல்வரோ சுயலாபத்திற்காகவே தனது முழு நேரத்தையும் செலவழித்துக் கொண்டிருக்கிறார்.
இப்படிப்பட்ட இவருக்கு, எனது மக்கள் சார்ந்த போராட்டங்கள் எரிச்சலை ஏற்படுத்துவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. மக்களின் குறைகளை அரசுக்கு எடுத்துச் சொல்வது எனது கடமை.
ஜனநாயக முறையில் மக்கள் கடைமையாற்றும் என்னை, கடமையாற்றவிடாமல் தடுப்பது ஜனநாயகத்தின் குரல் வளையை மிதிப்பதற்கு சமம். இதனை இனியாவது கருணாநிதி புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பாரிலானுங் கெடும் - என்றார் திருவள்ளுவர்.
தப்பு செய்தால் கண்டித்து அறிவுரை சொல்லும் பெரியோர் அருகில் இல்லாத அரசன் எதிரி இல்லாமலேயே அழிவான் என்ற குறளினை, குறளுக்கு உரை எழுதியதாக சொல்லிக் கொள்ளும் கருணாநிதி வரும் காலங்களிலாவது பின்பற்றுவது நல்லது என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications