'டூயட்' பாடிய ஜெ.வுக்கு போராட்டம்br/நடத்தும் தகுதி கிடையாது - கருணாநிதி சூடு!
சென்னை:
தமிழகத்திலே இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் நடந்து தமிழக மாணவர்கள் தெருவிலே பிணமாக வீழ்ந்தபோது, கார்வார், கோவா கடற்கரைகளில் டூயட்டுக்கு ஆடிக் கொண்டிருந்த ஜெயலலிதாவுக்கு போராட்டம் பற்றிப் பேச என்ன தகுதி உள்ளது என்று முதல்வர் கருணாநிதி கேட்டுள்ளார்.
முதல்வர் கருணாநிதி இதுகுறித்து வெளியிட்டுள்ள கேள்வி - பதில் பாணி அறிக்கை:
கேள்வி: சட்டத்திற்கு விரோதமாக ஜெயலலிதா விடுகின்ற அறிக்கைகளுக்கு ஆதாரங்களோடும், புள்ளி விவரங்களோடும் நீங்கள் தருகின்ற பதில் பற்றி ஜெயலலிதா பூச்சாண்டி காட்டுகிறாரா கருணாநிதி என்று கேட்டிருக்கிறாரே?
பதில்: அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். தனது ஆட்சிக் காலத்தில் நள்ளிரவில் வீட்டை உடைத்து உள்ளே புகுந்து கருணாநிதியை கைது செய்தோமே, அதற்குப் பதிலாக தன்னை எப்போது கைது செய்வார்களோ என்ற அச்சத்தில் தினம் தினம் நடுங்கிக் கொண்டு, தொண்டர்களைத் தூண்டி விட்டு அதிலே குளிர் காய்ந்து கொண்டிருக்கும் ஜெயலலிதாவிற்கு, நாம் நியாயமாக எழுதும் வார்த்தைகள் கூட பூச்சாண்டி காட்டுவதாகத் தெரியும்.
கடந்த 04-09-2007 அன்று நாளேடுகளில் வெளிவந்த ஜெயலலிதா அறிக்கையில், உளவுப்பிரிவு, உண்மையிலேயே செயல்பட்டு அந்த தகவல் அறிக்கைகளாக வெளிவரும்போது அதனை முதல்வருக்கு அளிக்கத் தேவையில்லை என்று உள்ளாட்சியும், உயர்கல்வியும் மற்றும் சில காகஸ் கும்பலும் மறித்து பிடுங்கி கிடப்பில் போட்டு விடுவதாக எனக்கு தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன என்று கூறி இருக்கிறார்.
உளவுப் பிரிவிலிருந்து தகவல்கள் அவரது ஆட்சிக்காலத்தில் முதல்வரை பார்க்க இயலாத நிலையில் தட்டச்சு செய்து ஆட்கள் மூலமாக அனுப்பப்படுவதைப் போல தற்போது வருவது இல்லை என்ற உண்மைகளையே அவர் தெரிந்து கொள்ளாத நிலையில் இருக்கிறார்.
உளவுத்துறை சார்பில் அன்றாடம் அந்தத் துறையின் அதிகாரி காலையில் என்னைச் சந்தித்து அவ்வளவு விவரங்களையும் நேரடியாக என்னிடம் தெரிவிப்பாரே, தவிர அவர் தகவல்களை அனுப்புகிறார் என்பதும், அதனை இடையில் அமைச்சர்களும் காகஸ் குழுவினரும் மறித்து பிடுங்கி கிடப்பில் போட்டு விடுவதாகவும் ஜெயலலிதா எழுதியதில் எந்தவிதமான உண்மையும் கிடையாது.
இது மாத்திரமல்ல. அவர் இவ்வாறு அன்றாடம் உண்மைக்கு மாறான செய்திகளை எல்லாம் வெளியிட்டு தொண்டர்களை உசுப்பிவிட்டு போராட்டங்களைத் தூண்டிவிட்டு கொண்டிருப்பதை குறிப்பிட்டுத்தான் இப்படிப்பட்ட செய்திகளைப் பரப்புவதும், அவற்றை வெளியிடுவதும் சட்டத்தை மீறுகின்ற செயல் என்றும் நான் சொல்லி இருக்கிறேன். இது எப்படி தவறாகும்.
அவசரக் குடுக்கை போல எந்த காரணமும் இல்லாமல் முன்னாள் முதலவரை அர்த்த ராத்திரியில் கைது செய்யச் சொல்வதும், பிறகு வழக்கு போட எந்தவிதமாக முகாந்திரமும் இல்லாமல் முகத்தில் கரியைப்பூசிக் கொண்டு நகைப்புக்கு ஆளாவதும் அவருக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம்.
இந்த அரசை பொறுத்த வரையில் நியாயமான முறையில் நேர்மையான வழியில் எல்லாவிதமான ஆதாரங்களையும் கையிலே வைத்துக் கொண்டு தான் செயல்படும். தவறு செய்யாதவர்களை தண்டிக்கவும் முடியாது. தவறு செய்தவர்கள் தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் முடியாது.
இதைப் புரிந்து கொள்ளாமல், அரசு நடத்துவோரை உருட்டி மிரட்டிப் பார்ப்பதும், ஜனநாயகத்திற்கு இலக்கணம் கூறிட முன்வந்து முந்திரிக் கொட்டை போல ஒவ்வொன்றிலும் தலைகாட்டுவதும், ஏதோ அவர் தான் ஜனநாயகச் செல்வி என்று சில ஏடுகள் தலைப்புச் செய்தி வெளியிடுவதும் நகைப்புக்கு இடமளிக்கும் காரியங்கள் என்பதையும் காவல் துறை உளவுத்துறை சட்டத்துறை இவற்றைத சட்டத்தை மீறிய நடவடிக்கைகள் என்பதை அம்மையார் அறிந்து கொள்வது நல்லது.
கேள்வி: ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் இந்திய விடுதலைக்காக போராடிய தலைவர்களைப் பற்றியோ அதனை அடக்குவதற்காக பிறப்பிக்கப்பட்ட ரவுலட் சட்டம் பற்றியோ நீங்கள் தெரிந்து கொள்ள வில்லை என்று சொல்லியிருக்கிறாரே?
பதில்: ஆமாம், வாய் பூட்டு சட்டம், அடக்கு முறை அராஜகம், அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை, கைது சிறை, தொழிலாளர்கள் மீது எஸ்மா, டெஸ்மா சட்டங்கள், மத மாற்றத் தடைச் சட்டம் இவையெல்லாம் தமிழ்நாட்டிலே கொண்டு வந்தது யார் என்று சிறு பிள்ளைகளைக் கேட்டாலே சொல்லுமே, ஜெயலலிதா என்று.
தமிழகத்திலே இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் நடந்து தமிழக மாணவர்கள் தெருவிலே பிணமாக வீழ்ந்தபோது கார்வார் கோவா கடற்கரைகளில் டூயட் பாட்டுக்கு நடனமாடிக் கொண்டிருந்தவருக்கு போராட்டம் பற்றி பேசுவதற்கு தகுதி ஏதாவது இருக்கிறதா?
கேள்வி: தமிழகத்தில் மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்களே?
பதில்: கிராம மக்களுக்குப் பணி புரிகின்ற ஆர்வமும், அக்கறையும் மருத்துவத்துறை மாணவர்களுக்கு வரவேண்டுமென்பதில் இரு கருத்துக்களுக்கு இடமில்லை. அதற்காக அவர்கள் ஓராண்டு காலம் மேலும் அதிகமாக படிக்க வேண்டும் என்ற கால நீடிப்பு ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இல்லை.
இந்த பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கூறியுள்ள கருத்துக்களை மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அன்புமணி ஏற்று செயல்பட வேண்டும் என்பது என்னுடைய விருப்பமாகும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications