பஸ் - கார் மோதி பயங்கர விபத்துbr/6 பேர் தீயில் கருகி சாவு
மாமல்லபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே காரும், பஸ்ஸும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் சிக்கி 6 பேர் பலியானார்கள்.
திருப்போரூரை அடுத்த மாம்பாக்கம் சமத்துவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (25). இவர் தனது மனைவி கற்பகம் (21), தாயார் ராதா (60) மற்றும் இரு மகன்களான அரவிந்த் (3), ஆகாஷ் (1)ஆகியோருடன் மரக்காணம் அருகே நடந்த உறவினர் வீட்டுத் திருமணத்தில் கலந்து கொண்டு விட்டு ஊர் திரும்ப பேருந்துக்காக காத்திருந்தார்.
கிழக்குக் கடற்கரையில் நீண்ட நேரமாக காத்திருந்தும் பேருந்து எதையும் காணவில்லை. அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி அதில் லிப்ட் கேட்டு ஏறியுள்ளனர். இந்தக் கார் நேற்று பிற்பகல் மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி என்ற கிராமத்திற்கு அருகே வந்து கொண்டிருந்தது.
எதிர் திசையில், வேளாங்கண்ணிக்கு ஒரு அரசுப் பேருந்து 45 பேருடன் வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதில் பஸ்சின் முன்பக்கத்தை துளைத்துக் கொண்டு கார் உள்ளே புகுந்தது. புகுந்த வேகத்தில் எறியவும் ஆரம்பித்தது. இதையடுத்து பேருந்தில் இருந்தவர்கள் வேகம் வேகமாக கீழே குதித்து உயிர் தப்பினர்.
ஆனால் கார் தீப்பிடித்து எரிந்ததில் அதில் இருந்த ஐந்து பேரும் கருகி உயிரிழந்தனர். ஆகாஷ் மட்டும் காருக்கு வெளியே தூக்கி எறியப்பட்டதால் தீக்காயத்துடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டான். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவனும் இன்று இறந்தான். இதையடுத்து சாவு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.
காருக்குள் இருந்த ஒரு நாய்க் குட்டி தீயில் கருகி இறந்தது. காரை ஓட்டி வந்தவர் யார் என்பது தெரியவில்லை.
இந்த கோர விபத்தால் கிழக்குக் கடற்கரைச் சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications