அம்மனிடமிருந்து பிரிக்க 'எதிர்ப்பு'br/கோவிலுக்குள் பூசாரி தற்கொலை!
சென்னை:
அம்மனிடமிருந்து தன்னைப் 'பிரித்து', கல்யாணம் செய்து வைக்க முயற்சிப்பதை எதிர்த்து பூசாரி ஒருவர் கோவிலுக்குள்ளேயே தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் பூசாரியாக இருந்தவர் சுரேஷ் குமார் (30). இவரது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யார். இந்த இளம் வயதியேலே தீவிர கடவுள் பக்தி கொண்டிருந்த சுரேஷ்குமார், கல்யாணத்தில் நாட்டம் இல்லாமல் சாமியார் போல இருந்து வந்தார்.
இதனால் கவலை அடைந்த அவரது குடும்பத்தினர் சுரேஷ் குமாருக்கு கல்யாணம் செய்து வைக்க முயற்சித்தனர். இதனால் அதிருப்தி அடைந்த சுரேஷ்குமார் வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்தார். தண்டையார்பேட்டையில் வசித்து வரும் தனது அண்ணன் வாசுதேவன் வீட்டில் தங்கினார்.
வாசுதேவன் ஒரு கோவில் பூசாரி ஆவார். அவரது உதவியால், துர்க்கை அம்மன் கோவிலில் பூசாரியாக சேர்ந்தார் சுரேஷ்குமார். இந்த நிலையில் திருமணம் செய்து கொள், அதுதான் நல்லது என்று வாசுதேவனும் வற்புறுத்த ஆரம்பித்துள்ளார்.
அத்தோடு நில்லாமல், பெண் பார்க்கவும் ஆரம்பித்தார். இதனால் அதிருப்தி அடைந்த சுரேஷ்குமார், அம்மனுக்கு சேவை செய்வதே எனக்கு திருப்தியானது. அப்படி இருக்கையில் அம்மனிடமிருந்து என்னைப் பிரித்து கல்யாணம் செய்து வைக்க முயற்சிக்கிறார்களே என்று விரக்தி அடைந்தார்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கோவிலுக்குள் சென்று தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அப்பகுதியில் பரபரப்பு கூடியது. நூற்றுக்கணக்கானோர் கோவில் முன்பு கூடினர்.
போலீஸார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications