கராச்சி சிறைக்குச் செல்வதாக கூறிbr/ஜெட்டாவுக்கு கூட்டிச் செல்லப்பட்ட ஷெரீப்!!
லண்டன்:
கராச்சி சிறைக்கு அழைத்துச் செல்வதாக கூறி நவாஸ் ஷெரீப்பை ஏமாற்றி ஜெட்டாவுக்கு கூட்டிச் சென்று விட்டதாக அவரது மனைவி குல்சூம் ஷெரீப் குற்றம் சாட்டியுள்ளார்.
ஷெரீப் நாடு கடத்தப்பட்டது குறித்து லண்டனில் தங்கியுள்ள அவரது மனைவி குல்சூம் ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது கணவரை ஏமாற்றி நாடு கடத்தி விட்டதாக அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் முக்கியப் பிரமுகர்கள் அறையில் வைக்கப்பட்டிருந்த எனது கணவரிடம், உங்களை நாங்கள் கைது செய்கிறோம், கராச்சியில் உள்ள லாண்டி சிறையில் அடைக்கப் போகிறோம். அதற்காக கராச்சிக்கு விமானம் மூலம் கொண்டு செல்கிறோம் என்று கூறியுள்ளனர்.
அவரும் அதை நம்பி விமானத்தில் ஏறியுள்ளார். விமானம் கிளம்பி 2 மணி நேரம் கழித்து எனது கணவர் கராச்சிக்கு எப்போது போவோம் என்று கேட்டுள்ளார். அப்போதுதான், நாம் கராச்சிக்குப் போகவில்லை, உங்களை ஜெட்டாவுக்கு கொண்டு செல்கிறோம் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதன் பின்னர்தான் தான் நாடு கடத்தப்படுவது எனது கணவருக்குத் தெரிய வந்துள்ளது. எனது கணவரை ஏமாற்றி நாடு கடத்தியது கடும் கண்டனத்துக்குரியது.
நான் விரைவில் பாகிஸ்தான் திரும்புவேன். எனது கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து போராடுவேன். சர்வாதிகாரி முஷாரப்பை எதிர்த்துப் போராடுவேன்.
நான் பாகிஸ்தான் திரும்பியதும் எனது கணவர் விட்டுச் சென்று பணிகளை நான் பொறுப்பேற்று நடத்துவேன். நான் எப்போது வருவேன் என்பதை முடிவு செய்யவில்லை. ஆனால் கண்டிப்பாக இன்னும் சில நாட்களில் நான் பாகிஸ்தானில் இருப்பேன் என்றார் குல்சூம்.
1999ம் ஆண்டு நடந்த ராணுவப் புரட்சிக்குப் பின்னர் ஷெரீப் கைது செய்யப்பட்டார். அப்போது குல்சூம்தான் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சிக்குத் தலைமை தாங்கினார் என்பது நினைவிருக்கலாம். பின்னர் 2000மாவது ஆண்டில் ஷெரீப்புடன் சேர்த்து குல்சூமும் நாடு கடத்தப்பட்டார்.


Click it and Unblock the Notifications
