அரசியலை விட்டு ஒதுங்கிட நினைத்தேன்-கார்த்திக்
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் கிடைத்த தோல்வியால் அரசியலை விட்டு ஒதுங்கி விடலாமா என்று கூட இடையில் நினைத்தேன். கட்சிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டு விட்டது. கட்சியை வளர்க்க இப்போது பல திட்டங்களை தீட்டியுள்ளோம் என்று பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.
கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக அரசியலுக்கு வந்தவர்களில் கார்த்திக்கும் ஒருவர். இருககிற கோஷ்டிகளை சமாளித்து வேட்பாளர்களை நியமித்து, அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்குள் கார்த்திக்கின் தாவு தீர்ந்து விட்டது. அப்படியும் கூட பல வேட்பாளர்களை கடத்திக் கொண்டு போய் விட்டதால் கார்த்திக்கே கூட சரிவர பிரசாரம் செய்ய முடியாத நிலை.
ஒரு வழியாக சட்டசபைத் தேர்தலில் பார்வர்ட் பிளாக் வேட்பாளர்கள் அத்தனை பேரும் டெபாசிட் இழந்தனர். அத்தோடு கார்த்திக்கைக் காணவில்லை. கிட்டத்தட்ட ஒரு வருடமாக அவர் என்ன செய்கிறார் என்று யாருக்குமே தெரியவில்லை.
இந்த நிலையில் திடீரென செய்தியாளர்களைச் சந்தித்தார் கார்த்திக். பிரெஞ்சு தாடி வைத்துக் கொண்டு வழக்கம் போல ஆங்கிலம் கலந்த தமிழில் பேட்டி அளித்தார் கார்த்திக்.
கார்த்திக் பேசுகையில், மிகவும் குறுகிய காலத்தில் நான் அரசியலுக்கு வந்ததால் சரிவர செயல்பட முடியவில்லை. மேலும் பாலிட்டிக்ஸ் செய்ய மணி வேண்டும். பட், வீ டோண்ட் ஹேவ் மணி!.
இடையில் கட்சிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டு விட்டது. அதை நான் மறைக்க விரும்பவில்லை. அரசியலிலிருந்தே ஒதுங்கி விடலாமா என்று கூட நினைத்தேன். ஆனால் கட்சியின் பொதுச் செயலாளர் பிஸ்வாஸ்தான் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
கட்சியை வளர்க்க பல திட்டங்களை வகுத்துள்ளோம். கட்சிக்குள் ஒற்றுமையைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். முயற்சிள் நடந்து வருகிறது. பிரிந்து கிடக்கும் பார்வர்ட் பிளாக் கட்சியினர் இணைய வேண்டும். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குள் கட்சி வலுப்பெற்று விடும்.
புதிதாக உருவாகும் கட்சிகளுக்கு முதலில் வரவேற்பு இருக்கத்தான் செய்யும். ஆனால் போகப் போகத்தான் அது வளருகிறதா, இல்லையா என்பது தெரியும். மக்கள் ஆதரவு இருந்தால்தான் ஒரு கட்சியால் வளர முடியும்.
விஜயகாந்த்தும், சரத்குமாரும் கட்சி ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கு நான் வாழ்த்து சொல்லிக் கொள்கிறேன். அவர்களுடன் நாங்ள் கூட்டணி சேருவோமா என்பதை சொல்ல முடியாது. எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடவுள்ளோம். ஒரு வாரம் கொண்டாடவுள்ளோம். 10 லட்சம் பேருக்கு அன்னதானம் செய்யவுள்ளோம். நலத் திட்ட உதவிகளையும் வழங்குகிறோம்.
தேவரின் குரு பூஜை தினமான அக்டோபர் 30ம் தேதியை அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை சூட்ட வேண்டும். திருநகரில் அவர் வாழ்ந்த வீட்டை நினைவகமாக மாற்ற வேண்டும். சென்னை அல்லது நெல்லையில், தேவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்றார் கார்த்திக்.












Click it and Unblock the Notifications