ரயில்வே கோட்டம் - திமுக 'டபுள் ஆக்ட்' பந்த்தால் பொள்ளாச்சி ஸ்தம்பிப்பு
பொள்ளாச்சி:
மதுரையிலிருந்து பிரித்து பாலக்காடு ரயில் கோட்டத்துடன் தங்களது பகுதிகளை இணைப்பதை எதிர்த்து பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை ஆகிய பகுதிகளில் இன்று திமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் கடையடைப்பு நடந்தது. இதனால் 3 ஊர்களும் ஸ்தம்பித்தன. அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டமும் நடந்தது.
முதலில் அதிமுக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டு அக்கட்சியின் சார்பில் இன்று பொள்ளாச்சியில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
திமுகவின் இரட்டை நிலை:
இந்த நிலையில் திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் இன்று பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை ஆகிய பகுதிகளில் கடையடைப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.
பாலக்காடு கோட்டத்துடன் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளை இணைப்பது தொடர்பாக லாலு முன்னிலையில் நடந்த ஒப்பந்தத்தில் திமுக எம்.பிக்களும் ஒத்துக் கொண்டு கையெழுத்திட்டனர்.
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளை கேரளாவுக்கு தாரை வார்ததுக் கொடுத்து விட்டு, கடையடைப்புப் போராட்டத்தில் திமுகவும் பங்கேற்றுள்ளது பெரும் ஆச்சரியத்தையும், திமுகவின் இரட்டை நிலையையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.
கடை அடைப்பு தொடர்பாக அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் கிணத்துக்கடவில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு மற்றும் ஆனைமலையில் நடைபெறவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு மக்கள் முழு ஆதரவு தரவேண்டும் என்று இதில் முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை 6 மணிக்கு கடையடைப்பு தொடங்கியது. மூன்று நகர்களிலும் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. வாகனப் போக்குவரத்தும் மிக மிகக் குறைவாக இருந்தது.
ஆட்டோக்கள் ஓடவில்லை. வக்கீல்கள் நீதிமன்றங்களைப் புறக்கணித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
கடையடைப்பு நடத்தப்படும் அதே வேளையில் கேரளாவிலிருந்து பொள்ளாச்சி வழியாக தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்கள் அனைத்தையும் தடுத்து நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டிருப்பதால் எல்லைப் பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மூன்று ஊர்களிலும் முக்கிய இடங்களில் போலீஸார் அதிக அளவில் நிறுத்தப்பட்டிருந்தனர்.
இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு திமுக தவிர கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவையும், அதிமுக, மதிமுக, சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, திக, பெரியார் திக, வியாபாரிகள் சங்கம் மற்றும் ஹோட்டல்கள் சங்கம் ஆகிய பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்திருந்தன.
நாளை மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் காலை 6 மணிக்கு பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் இருந்து ஊர்வலமாக சென்று பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் ரயில் மறியல் நடக்கிறது.












Click it and Unblock the Notifications