பிரதீபா, சோனியா இருக்கும் வரை திமுக அரசைக் கலைக்க முடியாது - வீராசாமி
சென்னை:
பிரதீபா பாட்டீல், சோனியா காந்தி இருக்கும் வரை, உச்சநீதிமன்றம் என்ன, ஐ.நா. சபையால் கூட திமுக ஆட்சியைக் கலைக்க முடியாது என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் நேற்று திமுக கூட்டணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சென்னை சேப்பாக்கத்தில் அரசினர் விருந்தினர் மாளிகை அருகே நடந்த உண்ணாவிரதத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்து இரண்டரை மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தார்.
மாலையில் ஆற்காடு வீராசாமி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். அப்போது வீராசாமி பேசுகையில், பந்த் நடத்த உச்சநீதிமன்றம் தடை செய்தபோது, அதனால் என்னா பஸ்சை நிறுத்தித்தான் பார்ப்போமே என்று நாங்கள் எல்லோரும் சொன்னோம். ஆனால் கலைஞர் ஜனநாயகத்தை மதிப்பவர், கோர்ட்டுகளின் உத்தரவுகளை மதிப்பவர்.
காவிரி விஷயத்தில் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதித்ததில்லை. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு உச்சநீதிமன்றத்தை மதித்ததில்லை. இப்படி உச்சநீதிமன்றத்தை மதிக்காத பல மாநிலங்கள் உள்ளன.
ஆனால் கருணாநிதி, நீதிமன்றங்களை மதிப்பவர். நீதிபதிகளை மதிப்பவர். அதனால்தான் முழு அடைப்புக்கு கோர்ட் தடை விதித்த மறு விநாடியே, அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் நடந்தது.
ஆனால் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என்று கூறி மனு கொடுக்கிறார்கள். அரசைக் கலையுங்கள் என்கிறார்கள். ஒரு அரசைக் கலைப்பது அவ்வளவு எளிதானதா?
உச்சநீதிமன்றம் சொல்லி இந்தியாவில் எந்த மாநிலமாவது கலைக்கப்பட்டிருக்கிறதா?. தமிழ்நாட்டில் பெரிய ஊர்வலம் நடத்தி பிரமாண்ட வரவேற்பு கொடுத்து தேர்ந்தெடுத்த குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல். மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்தால்தான் அரசைக் கலைக்க முடியும்.
ஆட்சியைக் கலைப்பதற்கு பிரதீபா பாட்டீல் யோசித்துப் பார்க்க மாட்டாரா? பிரதமரிடம் பேச மாட்டாரா? சோனியா காந்தி அவ்வளவு சீக்கிரம் திமுக அரசைக் கலைத்து விடுவாரா?.
இவர்கள் எல்லாம் இருக்கும் வரையில், திமுக அரசை, சுப்ரீம் கோர்ட் என்ன, ஐ.நா. சபையே ஆனாலும் கூட கலைக்க முடியாது என்றார் ஆற்காடு வீராசாமி.












Click it and Unblock the Notifications