சச்சின் மீது ரசிகர்கள் அதிருப்தி!
கொச்சி:
கொச்சியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் மூத்த வீரர்கள் சரியாக ஆடாததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மூத்த வீரர்களைத் தூக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
20-20 ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் சாம்பியன் ஆன மிதப்பில் இருந்த இந்திய வீரர்களுக்கு ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை விடுத்தார். நடந்தது வரலாறு. இனிமேல் நடக்கப் போவது குறித்துத்தான் இரு அணிகளும் கவலைப்பட வேண்டும். ஒவ்வொரு போட்டியிலும் நாங்கள் வெல்வோம் என்றார்.
அதற்கு பெங்களூரில் பதில் பேட்டி அளித்த ராபின் உத்தப்பா, தீயை தீயால் வெல்வோம் என்று சவால் விடுத்தார்.
ஆனால் நேற்று நடந்த போட்டியும் சரி, பெங்களூரில் மழையால் கைவிடப்பட்ட போட்டியாக இருந்தாலும் சரி, இரண்டிலுமே இந்தியாவின் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் ஆகியவை படு சொதப்பலாக இருந்ததைப் பார்த்து ரசிகர்கள் வெதும்பிப் போயுள்ளனர்.
முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 307 ரன்களை விளாசியது. முன்னணி வீரர்கள் யாரும் சிறப்பாக ஆடாத நிலையில் மைக்கேல் கிளார்க் மற்றும் ஹாடின் ஆகியோர் மட்டுமே ஆடியதற்கே ஆஸ்திரேலியா அத்தனை ரன்களைக் குவித்தது. நல்ல வேளையாக மழை குறுக்கிட்டதால், இந்தியா தோல்வியிலிருந்து தப்பியது.
அப்போட்டியில் சச்சின் டெண்டுல்கர் ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட் ஆகி ஜென்டிலாக வெளியேறினார். 2வது போட்டியிலும் சச்சின் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஆஸ்திரேலிய அணி மிகப் பெரிய ஸ்கோரை எடுத்திருந்தும், அதை தாண்ட, பொறுப்பான முறையில் விளையாட வேண்டிய மூத்த வீரரான சச்சின் மிகவும் அஜாக்கிரதையாக விளையாடியது ரசிகர்களை வெறுப்பேற்றியுள்ளது.
மேலும் புதிதாக அறிமுகப்படுத்ப்பட்ட ஃப்ரீ ஹிட் முறையையும் சச்சின் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்த முறைப்படி, ஒருவர் நோ பால் போட்டால், அடுத்த பந்து ஃப்ரீ ஹிட் ஆகும். அந்தப் பந்தை அடிக்கும் பேட்ஸ்மேனை, ரன் அவுட் முறை மூலம் மட்டுமே ஆட்டமிழக்கச் செய்ய முடியும். இதனால் பேட்ஸ்மென்களுக்குச் சாதகமான இந்த பந்தை அடித்து விளாச பேட்ஸ்மென்கள் எப்போதுமே ஆர்வமாக இருப்பார்கள்.
ஆனால் சச்சின் தனக்குக் கிடைத்த ஃப்ரீ ஹிட் பந்தில் ஒரு ரன் கூட எடுக்காமல் வீணடித்து விட்டார்.
இதேபோல டிராவிட்டும் பெரிய அளவில் ரன் சேர்க்கவில்லை. 31 ரன்களை மட்டுமே எடுத்து அணியைக் கைவிட்டு விட்டார். கங்குலி நேற்றைய போட்டியில் விளையாடவே இல்லை.
முந்தைய சாதனைகளை மட்டும் வைத்துக் கொண்டு இன்னும் எத்தனை நாட்களுக்கு மூத்த வீரர்களான சச்சின் உள்ளிட்டோர் விளையாடப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
இதை விட நேற்றைய போட்டியில் பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் செய்த அலம்பல் படு ஓவராக இருந்தது. கிட்டத்தட்ட தாதா போல மைதானத்தில் நடந்து கொண்டார் ஸ்ரீசாந்த். சொந்த மாநிலத்தில் நடக்கும் போட்டி என்பதால், உற்சாகத்தில் துள்ளிக் குதித்த ஸ்ரீசாந்த், ஆஸ்திரேலிய வீரர்களுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், முறைப்பதுமாக இருந்தார்.
ஒரு கட்டத்தில் நடுவர்களும், கேப்டன் டோணியும் தலையிட்டு ஸ்ரீசாந்த்தை அமைதிப்படுத்த வேண்டியதாயிற்று. ஆனால் ஸ்ரீசாந்த் காட்டிய வேகத்தை, தங்களது ஆட்டத்தில் விவேகமாக பயன்படுத்தி கலக்கி விட்டனர் ஆஸ்திரேலிய வீரர்கள்.
பேச்சை விட செயல்தான் முக்கியம் என்பதை ஆஸ்திரேலியர்கள் சொல்லாமல் சொல்லி விட்டனர். வேகமாக இருப்பதை விட விவேகமாக இருப்பதே முக்கியம் என்பது நேற்றைய போட்டியின் பாடமாக அமைந்தது.
20 ஓவர் போட்டியில் இளம் மற்றும் புதுமுக வீரர்கள் இருந்தனர். சீனியர் வீரர் களான முன்னாள் கேப்டன்கள் டிராவிட், தெண்டுல்கர், கங்குலி ஆகியோர் இடம் பெறவில்லை.
கடந்த இரு போட்டிகளையும் பார்க்கும்போது, அதிரடியாக ஆட வேண்டுமே என்ற பயத்தில்தான் 20-20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து அவர்கள் விலகி கொண்டார்களா என்று சந்தேகம் வருகிறது.
டெண்டுல்கர் நன்றாக ஆடி ரொம்ப காலமாகிறது. எப்போதாவது திடீரென நன்றாக ஆடுவார். அதன் பிறகு பல தொடர்களுக்குக் கட்டையைப் போடுவார். இப்படித்தான் சில வருடங்களாக அணியில் நீடித்துக் கொண்டிருக்கிறார் டெண்டுல்கர்.
நன்றாக ஆடிக் கொண்டிருந்த திணேஷ் கார்த்திக் என்ன ஆனார் என்று தெரியவில்லை. டெண்டுல்கர், ஹர்பஜன் சிங் உள்ளிட்டவர்களை சேர்க்க வேண்டும் என்பதற்காக திணேஷ் கார்த்திக்கை கழற்றி விட்டு விட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.












Click it and Unblock the Notifications