மாவட்ட ஆட்சியரை அடித்துக் கொன்ற முன்னாள் எம்.பி. உள்ளிட்ட 3 பேருக்கு தூக்கு
பாட்னா:
பீகார் மாநிலத்தில் மாவட்ட ஆட்சியரை அடித்துக் கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் ஐக்கிய ஜனதாதள முன்னாள் எம்.பி. ஆனந்த் மோகன் உள்ளிட்ட 3 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனந்த் மோகனின் மனைவியும், அதே கட்சியின் முன்னாள் எம்.பியுமான லவ்லி ஆனந்த்துக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது.
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்ட ஆட்சியராக இருந்தவர் கிருஷ்ணய்யா. இவர் கடந்த 1994ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் அப்போது பீகார் மக்கள் கட்சியின் தலைவராக இருந்த (பிறகு ஐக்கிய ஜனதாதளத்தில் இணைந்தார்) ஆனந்த் மோகன், அவரது மனைவி லவ்லி ஆனந்த் ஆகியோர்தான் கும்பலை ஏவி நீதிபதியைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் ஆனந்த் மோகன், லவ்லி ஆனந்த் தவிர, முன்னாள் எம்.எல்.ஏ அக்லாக் அகமது, ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் அருண்குமார், தற்போதைய எம்.எல்.ஏ விஜய் குமார் சுக்லா, சசி சேகர், ஹரேந்திர குமார் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
இவர்கள் மீதான வழக்கு பாட்னா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் ஆனந்த்மோகன், அக்லாக் அகமது, அருண்குமார் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
லவ்லி ஆனந்த், விஜய் குமார் சுக்லா, சசி சேகர், ஹரேந்திர குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
முன்னாள் எம்.பி. ஒருவருக்கு தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டிருப்பது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனந்த் மோகனுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டிருப்பது பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 13 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications