சட்ட மாணவர்கள் ரவுடித்தனம்: உதவி ஆணையர் காவலர்களைத் தாக்கி அராஜகம் - ஜீப்கள் உடைப்பு

Subscribe to Oneindia Tamil


சென்னை:

சென்னையில் நள்ளிரவில் குடிபோதையில் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு காசு கொடுக்காமல் ரவுடித்தனம் செய்த சட்டக் கல்லூரி மாணவர்களைத் தட்டிக் கேட்ட இரு காவலர்கள், அது குறித்து விசாரிக்க வந்த உதவி ஆணையர், இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் ஆகியோரை மாணவர்கள் கடுமையாக தாக்கி காயப்படுத்தினர். போலீஸார் வந்த ஜீப்களும் அடித்து நொறுக்கப்பட்டன.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்பு போலீஸாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், சட்டக் கல்லூரி மாணவர்கள் சிலர், உதவி ஆணையர் உள்ளிட்ட போலீஸாரை நள்ளிரவில் கடுமையாகத் தாக்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

சென்னை புரசைவாக்கத்தில் அரசு அம்பேத்கர் சட்டக் கல்லூரி விடுதி உள்ளது. இங்கு தங்கிப் படிக்கும் மாணவர்கள் சிலர் அப்பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்றுள்ளனர். அனைவரும் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.

சாப்பிட்டு முடித்ததும் அனைவரும் அதற்குரிய பணத்தை கொடுக்காமல் கிளம்பியுள்ளனர். இதையடுத்து அவர்களை ஹோட்டல் ஊழியர்கள் தடுத்து நிறுத்தி பணம் கேட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்களுடன் மாணவர்கள் தகராறு செய்துள்ளனர்.

இதையடுத்து அருகில் உள்ள போலீஸ் பூத்தில் இருந்த இரு காவலர்களிடம் ஹோட்டல் ஊழியர்கள் போய் புகார் கூறியுள்ளனர். அந்தக் காவலர்களும் மாணவர்களிடம் விசாரித்தனர். அப்போது இரு காவலர்களையும் மாணவர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இதையடுத்து கீழ்ப்பாக்கம் உதவி ஆணையர் ராஜாமணிக்குத் தகவல் போனது. அவர் இன்ஸ்பெக்டர் கனகராஜ், சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் விரைந்து வந்தனர். அப்போது மணி நள்ளிரவு 12.30.

மாணவர்களை சமாதானப்படுத்தி விடுதிக்குப் போகுமாறு ராஜாமணி கூறினார். ஆனால் கோபமடைந்த மாணவர்கள் உதவி ஆணையரையும், அவருடன் வந்த போலீஸாரையும் மிகக் கடுமையாகத் தாக்கினர். இதில் ராஜாமணியில் கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

மேலும் விடுதிக்குள் இருந்த மாணவர்களும் போலீஸார் மீது கடும் தாக்குதலில் இறங்கினர். கற்களை வீசித் தாக்கினர். போலீஸ் பூத், போலீஸார் வந்த வாகனங்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். அந்த இடமே போர்க்களம் போலக் காணப்பட்டது.

பிரச்சினை பெரிதானதைத் தொடர்ந்து கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் பாலசுப்ரமணியம் அங்கு விரைந்து வந்தார். அதற்குள் சட்டக் கல்லூரி மாணவர்கள் விடுதிக்குள் போய் விட்டனர். காயமடைந்த உதவி ஆணையர் உள்ளிட்டோர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இதுகுறித்து துணை ஆணையர் பாலசுப்ரமணியம் கூறுகையில், மாணவர்கள் என்பதால் மிகப் பொறுமையாக போலீஸார் நடந்து கொண்டனர். ஆனால் மாணவர்கள் எல்லை மீறி நடந்து கொண்டனர். உதவி ஆணையரையே தாக்கியுள்ளனர். அனைத்து மாணவர்களும் நல்ல குடிபோதையில் இருந்துள்ளனர்.

இதுகுறித்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தவறு செய்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விடுதி வார்டன் மற்றும் கல்லூரி முதல்வருடன் ஆலோசனை நடத்தவுள்ளோம் என்றார்.

நள்ளிரவில் சட்டக் கல்லூரி மாணவர்கள் மிகவும் மோசமாக நடந்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டக் கல்லூரி மாணவர் விடுதி உள்ள இப்பகுதியில் அடிக்கடி இவ்வாறு மாணவர்கள் நடந்து கொள்வதால் இப்பகுதியில் வியாபாரம் செய்வோர், ஹோட்டல் வைத்திருப்போர் உள்ளிட்டோர் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+