சுஷில்ஹரி பள்ளியில் மனித கொலு
சென்னை:
சென்னை அருகே கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி சர்வதேச உறைவிடப் பள்ளியில், அக்டோபர் 11ம் தேதி முதல் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இங்கு மனித கொலு வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளி மாணவர்களும், சம்ரட்சனா அமைப்பும் இணைந்து இந்தக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன. கேளம்பாக்கத்தில் உள்ள ராமராஜ்யா வளாகத்தில் இது நடந்து வருகிறது.
சிவசங்கர் பாபா அவர்களின் யோசனையின்படி மனித கொலு இங்கு வைக்கப்பட்டிருப்பது விசேஷமானதாகும். கடந்த பத்து ஆண்டுகளாக இந்த மனித கொலு இங்கு நடந்து வருகிறது.
வயது வித்தியாசமில்லாமல் பல்வேறு தரப்பினரும் இந்த மனித கொலுவில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள்.
வழக்கமாக கொலுக்களில் பொம்மைகள்தான் இடம் பெறும். ஆனால் இங்கு நடைபெறும் கொலுவில் பொம்மைகளுக்குப் பதில் மனிதர்களே இடம் பெற்றுள்ளனர். இது பார்வையாளர்களை வெகுவாக கவரும் வகையில் உள்ளது.
இந்த ஆண்டு வாழ்க்கைக் கொண்டாட்டம், குற்றால குறவஞ்சி, கிஷ்கிந்தா காண்டம், அபங், திருமங்கை ஆழ்வார், பகத் பாம் பாம் போலே சிவா ஆகிய தலைப்புகளில் நவராத்திரி கொண்டாடப்படுகிறது.
மனித கொலுவை சிறப்பாக வடிவமைப்பதற்காக சுஷில் ஹரி பள்ளியும், சம்ரட்சனாவும் இணைந்து பல்வேறு தோட்டங்களை உருவாக்கியுள்ளன.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களைக் குறிக்கும் வகையில் இந்த தோட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இங்கு கண்ணகி, பாரி, மனு நீதி சோழன் உள்ளிட்ட வரலாற்று நாயகர்களை சித்தரிக்கும் வகையில் வேடமிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இத்தகவலை சுஷில் ஹரி பள்ளி தாளாளர் எஸ். வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications