சாமியார்களுக்கு ரஜினி அறிவுரை சொல்ல வேண்டும்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil


சென்னை:

ராமருக்கும், எனக்கும் எந்த விரோதமும் இல்லை, எனவே சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்க்காதீர்கள் என்று வட இந்திய சாமியார்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவுரை கூற வேண்டும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

Karunanithiசென்னையில் நடந்த திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில் சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக நிலவும் பிரச்சினைகளை சரி செய்து அது நிறைவேற முதல்வர் கருணாநிதி உதவ வேண்டும் என்று பேசினார்.

இதற்கு தனது பேச்சில் முதல்வர் கருணாநிதி பதிலளித்தார். முதல்வர் கருணாநிதி பேசுகையில், ராமர் குறித்து எனக்கு எந்தவித காழ்ப்புணர்ச்சியும், விரோதமும் இல்லை. ராமரை ஒரு மனித குல இளவரசராகத்தான் பார்க்கிறேன். மறைந்த மூதறிஞர் ராஜாஜி கூட ராமரை இளவரசராகத்தான் தனது நூலில் எழுதியுள்ளார். அவரிடம் எந்த இறையம்சமும் இல்லை என்றும் தனது நூலில் கூறியுள்ளார்.

ராஜாஜி எழுதியுள்ள சக்கரவர்த்தி திருமகன் நூலின் முன்னுரையில், ராமாயணம் ஒரு புராணம். அது வரலாறு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

வரலாறு என்பது ஆய்வாளர்களால் பதியப்படும் சாசனம் போன்றது. ஆனால் புராணங்கள், மனிதர்களுக்கு அறிவுரை கூறவும், மன மகிழ்ச்சிக்காகவும் உருவாக்கப்பட்டவை. அந்த வகையில் ராமாயாணம் ஒரு புராணம்.

இந்தக் கருத்தின் அடிப்படையில்தான் ராமனை ஒரு இளவரசர் என ராஜாஜி எழுதியுள்ளார். சமுதாயத்திற்கு நல்லது செய்த இளவரசர் என்றும் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

ராமர் செய்த நல்ல விஷயங்களை நான் பாராட்டுகிறேன், வரவேற்கிறேன். உண்மையில், சேது சமுத்திரத் திட்டத்தை ராமர் பெயரில் கொண்டு வந்தாலும் கூட நான் அதை எதிர்க்க மாட்டேன்ன்.

கிருஷ்ணா நதி நீர்த் திட்டத்தில் கிருஷ்ணர் பெயர் இருக்கிறதே என்பதற்காக அதை நாங்கள் எதிர்த்தோமா. எனது அமைச்சரவை சகாக்கள் துரைமுருகனும், இந்த திட்டத்தை நிறைவேற்ற சாய்பாபாவின் உதவியை நாடினார்களே.

சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற உதவ வேண்டும் என்று தம்பி ரஜினிகாந்த் கூறினார். அதேபோல அவரும் இதற்கு உதவ வேண்டும். இது அண்ணன், தம்பிகளுக்கிடையிலான கருத்துப் பரிமாற்றம்.

இந்த நேரத்தில் தமிழக மக்களின் சார்பில் ரஜினிக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். வட இந்தியத் தலைவர்கள், சாதுக்களிடம், நான் ராமருக்கு எதிரானவன் அல்ல, இந்துக்களின் உணர்வுகளுக்கு எதிரானவன் அல்ல என்பதை எடுத்துக் கூறி, அறிவுரை கூறி, இந்தத் திட்டம் நிறைவேற உதவ வேண்டும்.

முடிந்தால், எனது தலைவர் பெயரும் கூட ராமசாமி (பெரியாரைத்தான் இவ்வாறு குறிப்பிட்டார்) என்றும் கூறுங்கள் (கூட்டத்தில் பலத்த கைத்தட்டல்).

சேது சமுத்திரத் திட்டத்தைப் பொருத்தவரை, திமுகவாக இருந்தாலும் சரி, அதிமுகவாக இருந்தாலும் சரி, இடதுசாரிகளாக இருந்தாலும் சரி, அந்தத் திட்டம் தமிழகத்தின் வளர்ச்சிக்கு உதவும் என்பதை ஒருமனதாக ஒத்துக் கொண்டிருக்கிறார்கள், தங்களது தேர்தல் அறிக்கைகளிலும் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே இப்படிப்பட்ட நல்ல திட்டம் மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால், மத வெறியின் பெயரால் தடுக்கப்பட்டு விடக் கூடாது என்பது எனது விருப்பம் என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+