அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ்களுக்கு 'டயல் 1056'
கடலூர்: விபத்து நேரங்களில் அரசு மருத்துவமனையின் ஆம்புலன்ஸ்களை தொடர்பு கொள்ள 1056 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
கடலூரில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது,
கடலூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைப்பது தொடர்பாக அரசு பரிசீலனை செய்து வருகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு 6,000 ரூபாய் வழங்கும் திட்டம் நல்ல பலனை கொடுத்துள்ளது.
மழைக் காலத்தில் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். மழைகால சூழ்நிலையை சமாளிக்கும் பொருட்டு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதியளவு மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
அரசு டாக்டர்கள் பணி நேரத்தில் சொந்த கிளினிக்குகளுக்குச் செல்லாமல் அரசு மருத்துவமனையில் முழுமையாக பணியில் ஈடுபட்டுள்ளார்களா என்று மாவட்ட மருத்துவ அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். உள்ளாட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகளும் இதை கண்காணிக்க வேண்டும்.
பிரசவ காலங்களில் தாய், குழந்தை இறப்பு இருக்கக்கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது. கிராமங்களில் பிரசவத்தின் போது தாய், சேய் இறந்தால் சம்பந்தப்பட்ட செவிலியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளை இலவசமாக தொடர்பு கொள்ள 1056 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். விபத்து நேரங்களில் இந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்படும்.
அந்த ஆம்புலன்சுக்கு கட்டணமாக 1 கிலோ மீட்டருக்கு ரூ. 5 கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த தொலைபேசி எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்றார்.












Click it and Unblock the Notifications