கும்பகோணம் காளியம்மன் கோவிலில் கொள்ளை!
கும்பகோணம்: கும்பகோணத்தில் நள்ளிரவில் கோவில் பூட்டை உடைத்து கொள்ளை நடந்துள்ளது.
கும்பகோணம்-சென்னை சாலையில் உள்ள மானம்பாடி என்ற ஊரில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலுக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து வழிபாடு செய்வது வழக்கம். இந்த கோவிலின் பூசாரியாக அமிர்தலிங்கம் உள்ளார்.
இவர் வழக்கமாக கோவில் பூஜைகளை முடித்துவிட்டு இரவு வீட்டுக்கு சென்றுள்ளார். மறுநாள் காலை கோவிலுக்கு வந்து பார்த்தபோது கோவிலின் பூட்டும், வெளி கேட்டும் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கோவிலில் பீரோவில் இருந்த ரூ. 2,000 பணம், அம்மன் புடவைகள், பல ஆயிரம் மதிப்புள்ள நகைகள், அம்மனின் கழுத்து தாலி ஆகியவற்றை மர்ம மனிதர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இந்த திருட்டு குறித்து அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து விட்டு காவல் துறைக்கு புகார் செய்தனர்.
அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் கோயில் பூசாரியிடம் விசாரணை செய்தனர். பின்பு வழக்கு பதிவு செய்து அம்மன் கோயில் நகைகளை திருடி சென்றவர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
