கமலா அம்மாளுக்கு கருணாநிதி அஞ்சலி
சென்னை: மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மனைவி கமலா அம்மாளின் உடல் தகனம் நாளை நடைபெறுகிறது. அவரது உடலுக்கு முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட பெரும் திரளான பிரமுகர்கள், திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.
கமலா அம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை மரணமடைந்தார்.
அவரது உடல் சிவாஜி கணேசனின் இல்லமான அன்னை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல் கட்சியினர், பல்துறைப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கண்கலங்கிய கருணாநிதி:
நேற்று இரவு 7 மணியளவில் கமலா அம்மாள் உடலுக்கு அஞ்சலி செலுத்த முதல்வர் கருணாநிதி வந்தார். அவருடன் அமைச்சர் பொன்முடியும் உடன் வந்தார்.
கமலா அம்மாள் உடலைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்ட கருணாநிதி கண்கலங்கினார். அவரைப் பார்த்ததும் பிரபு, ராம்குமார் ஆகிய இருவரும் கண்கலங்கி அழுதனர். அவர்களுக்கு கருணாநிதி மெளனமாக ஆறுதல் கூறினார்.
பின்னர் கமலா அம்மாளின் உடல் அருகே அமர்ந்தார். பிரபுவிடம் எப்படி கமலா அம்மாள் இறந்தார் என்று விசாரித்தார்.
பிறகு வெளியில் வந்த முதல்வர் கருணாநிதி கமலா அம்மாள் குறித்துக் கூறுகையில், மேலும் மேலும் என்னுடைய இதயத்தை சோகச் சுமைகள் தாக்கியவண்ணம் உள்ளன. அதைத்தான் இன்று உணர்கிறேன்.
ஆருயிர் நண்பர் சிவாஜிக்கும், அருமைத் தங்கை கமலம் அம்மையாருக்கும் திருமணத்தை நடத்தி வைத்தவன் நான். இன்று இந்தக் கோலத்தையும் பார்க்கும்போது நான் எவ்வளவு துயரத்தை தாங்க வேண்டியுள்ளது என்பதை என்னால் சொல்ல இயலவில்லை.
இது என்னுடைய குடும்பம். இந்த குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் இருக்கிறார்கள்.
மறைந்தும் மறையாத எனதருமை நண்பர் சிவாஜியின் குடும்பம். அவருடைய செல்வங்களும், பிள்ளைகளும் அவர் ஈட்டியிருந்த புகழை காப்பாற்றுகின்ற அளவுக்கு காவல் தெய்வங்களாக சிவாஜியும், கமலா அம்மாளும் விளங்கிட வேண்டும் என்ற செய்தியைத்தான் இந்த இரங்கல் உரையில் இணைத்து எனக்கு நானே ஆறுதல் கூறிக் கொள்கிறேன் என்று கூறிய முதல்வரால் தொடர்ந்து பேச முடியாமல் துக்கம் தொண்டையை அடைக்க கண்கலங்கியபடி தனது பேச்சை நிறுத்தினார்.
ஜெ. அஞ்சலி:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று மாலை அன்னை இல்லத்திற்கு வந்து கமலா அம்மாள் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மகன்கள் ராம்குமார், பிரபுவுக்கு ஆறுதல் கூறினார்.
இதேபோல தொழிலதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் உள்ளிட்ட பல்துறைப் பிரமுகர்களும் கமலா அம்மாள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
சோகத்தில் ரஜினி:
ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் வந்தார். கமலா அம்மாளின் உடல் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டபோது ரஜினியும் தனது மனைவியுடன் அங்கு வந்து சேர்ந்தார்.
அவரைப் பார்த்து பிரபுவும், ராம்குமாரும் கதறி அழுதனர். அவர்களைக் கட்டிப் பிடித்து ரஜினி ஆறுதல் கூறினார். பின்னர் வீட்டுக்குள் சென்ற ரஜினி, அங்கு சிவாஜி, கமலா அம்மாள் கடைசியாக வாழ்ந்த அறைக்குப் போய் அமர்ந்து கொண்டார். அவருடன் பிரபுவும், ராம்குமாரும் உடன் அமர்ந்தனர்.
ஆனால் அவர்களை வருகிறவர்களைப் போய் பார்க்குமாறும், நான் அம்மாவும், அப்பாவும் கடைசியாக வாழ்ந்த இந்த அறையில் சிறிது நேரம் தனியாக அமர்ந்து விட்டு வருகிறேன் என்று கண் கலங்கியபடி கூறி இருவரையும் அனுப்பி வைத்தார்.
உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்ட ரஜினியின் வேண்டுகோளை ஏற்று பிரபுவும், ராம்குமாரும், ரஜினியை தனியாக விட்டு விட்டு வந்தனர்.
விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடனும், சத்யராஜ் தனது மனைவி மகேஸ்வரியுடனும், பாண்டியராஜன் மனைவி வாசுகியுடனும் வந்து அஞ்சலி செலுத்தினர்.
கண்கலங்கிய கமல்:
மனோரமா, கமலா அம்மாளின் உடலைப் பார்த்து கதறி அழுதார். பின்னர் பிரபு, ராம்குமாரைக் கட்டிப் பிடித்து கண்ணீர் விட்டு அழுதார்.
கமல்ஹாசன் மருத்துவமனைக்கு சென்று பிரபு, ராம்குமாரைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கண் கலங்கினார். அப்போது எங்க அம்மா இறந்துட்டாங்களே என்று கண்ணீர் மல்க அவர் கூறினார்.
நாளை உடல் தகனம்:
சிவாஜி, கமலா அம்மாளின் மூத்த மகள் சாந்தி, மலேசியாவில் வசித்து வருகிறார். இளைய மகள் தேன்மொழி மகள் பிரசவத்திற்காக கனடா சென்றுள்ளார்.
தேன்மொழி வருவதற்கு கால தாமதம் ஆகும் என்பதால், உடல் தகனத்தை நாளை காலை 9 மணிக்கு வைத்துள்ளனர். பெசன்ட் நகர் மின் மயானத்தில் உடல் தகனம் நடைபெறும் என சிவாஜி குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
கமலா அம்மாள் குறித்து நடிகர் சிவக்குமார் கண் கலங்கியபடி கூறுகையில், ஒரு கணவன், மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சிவாஜி சாரும், கமலா அம்மாளும்தான் உதாரணம். இருவரும் ஒருவர் மீது ஒருவர் அப்படிப் பிரியமாக இருந்தனர். மாமா என்றுதான் சிவாஜி சாரை அவர் சொல்வார், சிவாஜி சாரும், கமலாம்மா என்றுதான் அன்போடு அழைப்பார்.
சிவாஜி சார் இறந்த பிறகு அவரது நினைவுகளிலேயே மூழ்கிப் போய் விட்ட கமலா அம்மாள் அவருடைய நினைவுகளுடனேயே மறைந்தும் போய் விட்டார் என்றார்.












Click it and Unblock the Notifications