சாக்கு பையில் தொங்கிய எய்ட்ஸ் பாதித்த குழந்தை!
தர்மபுரி: எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை சாக்கு பையில் கட்டி மரத்தில் தொங்கவிட்ட குழந்தையை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தர்மபுரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் தென்பெண்ணையாறு அருகேயுள்ள மரத்தில் அப்பகுதி மக்கள் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு-மாடு கன்று ஈன்ற பின்னர் அதனுடைய சினைப்பை கழிவுகளை நாய்கள் கடித்து குதறிவிடாமல் இருப்பதற்காக அதனை சாக்கு பைகளில் கட்டி இந்த மரங்களில் தொங்க விடுவர்.
இதேபோன்று தொங்கவிடப்பட்டிருந்த பிளாஸ்டிக் சாக்கு பையிலிருந்து ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. அப்பகுதி வழியாக சென்ற மக்கள் அந்த சாக்கு பையை இறக்கி பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்தனர்.
அந்த பையினுள் ஒரு ஆண் குழந்தை உடல்நிலை மிகவும் பலவீனமான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. உடனே அப்பகுதி மக்கள் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு சென்று ஒப்படைத்தனர்.
பின்னர் அந்த குழந்தைக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் ஓசூர் பகுதியில் உள்ள தத்து நிறுவன ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்து பார்த்ததில் அந்த குழந்தைக்கு எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. 2 வயதிருக்கும் அந்த குழந்தை 6 மாத குழந்தை போல வளர்ச்சியின்றி இருந்தது.
பின்னர் ஓசூர் ஆசிரம நிறுவனத்தினர் அந்த குழந்தையை வளர்ப்பது கடினம் என்று கருதி மீண்டும் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனை டாக்டரிடமே ஒப்படைத்துவிட்டனர்.
எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட இந்த குழந்தை குறித்து தர்மபுரியில் உள்ள பாசிட்டிவ் நலச்சங்கத்திற்கு டாக்டர்கள் தகவல் கொடுத்தபின்னர், அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை எடுத்து வந்து தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டது தெரிந்து தான் இந்த குழந்தையை பெற்ற தாய்-தந்தையினர் சாக்கு பையில் கட்டி மரத்தில் தொங்க விட்டுள்ளனர். இது குறித்து போலீசார் அப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இன்று குழந்தைகள் தினம் என்பது குறிப்பிடத்தக்கது.!!!












Click it and Unblock the Notifications