வைகோ கைது: நெல்லையில் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டதை கண்டித்து நெல்லையில் இன்று மதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் படுகொலைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னையில் இரங்கல் பேரணி நடத்துவதற்கு போலீசார் தடை விதித்தனர்.
இந்த பேரணியில் பங்கேற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக விடுதலை ஆதரவு ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், இந்திய தேசீய லீக்கின் மாநில செயலாளர் பஷீர் அகமது உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் இந்த போக்கை கண்டிக்கும் வகையில், நெல்லை மாநகர், புறநகர் மாவட்ட மதிமுக சார்பில் இன்று நெல்லை மாநகராட்சி அலுவலகம் முன்பு மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தலைமையில் டாக்டர் சதன் திருமலைகுமார் எம்.எல்.ஏ முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
புதுச்சேரியி்ல் மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்:
கைது செய்யப்பட்ட வைகோவை விடுதலை செய்யக்கோரி புதுச்சேரி மதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்.மணிமாறன் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட மதிமுகவினர், கடந்த திங்களன்று கைது செய்யப்பட்ட வைகோ, நெடுமாறன் உட்பட அனைவரையும் அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி கோஷம் எழுப்பினர்.


Click it and Unblock the Notifications
