முன்னாள் துணை வேந்தர்-மனைவி கொலையில் டிரைவர் கைது
நாகர்கோவில்: நாகர்கோவிலில் முன்னாள் துணைவேந்தர், அவரது மனைவி, காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவர்களிடம் வேலை பார்த்த டிரைவர் உள்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பட்டகசாலியன்விளையில் வசித்து வந்தவர் மாலிக் முகமது. ஓய்வு பெற்ற இவர் கேரள பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக இருந்தவர். கடந்த வாரம் மாலிக் முகமது, அவரது மனைவி கதீஜா பீவி மற்றும் காவலாளி ஞானப்பிரகாசம் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக தனிப்படை போலீசார் நாகர்கோவிலை சேர்ந்த அன்பரசு, கோபு என்ற சகாயபுருனே ஆகியோரை கைது செய்துள்ளனர்.
இது குறித்து டி.ஐ.ஜி கண்ணப்பன் கூறியதாவது,
மாலிக் முகமது வீட்டில் அன்பரசு டிரைவராக வேலை பார்த்துள்ளார். இவரின் நடவடிக்கைகள் சரியில்லாததால் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளார். பின்னர் சென்னை சென்ற அன்பரசு நவம்பர் முதல் வாரம் தீபாவளிக்காக நாகர்கோவில் வந்து உள்ளார்.
செலவுக்கு பணம் இல்லாததால் தீபாவளியன்று தனது நண்பர் கோபியை அழைத்து கொண்டு மாலிக் முகமது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு முதலில் காவலாளி ஞானபிரகாசத்தை கொன்றுள்ளனர். மாலிக் முகமதுவிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர். அவர் தர மறுக்கவே அவரையும் கொன்றுள்ளனர்.
அதன்பின் கதீஜாபீவியிடமும் மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அவர் பணம் இல்லை. மதுரையில் உள்ள மகளிடம் வாங்கி தருகிறேன் என்று கூறி இருக்கிறார். அவரை காரில் அழைத்துக் கொண்டு மதுரை சென்றுள்ளனர்.
ஆனால், இடையில் பயம் வந்ததால் அவரை சென்னைக்கு கொண்டு செல்ல முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால் சென்னைக்கு போகும் வழியில் விழுப்புரம் அருகே ஓலங்கூர் என்ற இடத்தில் அவரை கொலை செய்து எரித்துள்ளனர் என்றார்.
இந்தக் கொலை சம்பவத்தில் வேறு எவருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications