அமெரிக்க சர்ச்சில் முழங்கிய சமஸ்கிருத மந்திரம்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த தேங்க்ஸ் கிவிங் நிகழ்ச்சியில், நிவேதா மாநிலத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ பேராலயத்தில் சமஸ்கிருத மந்திரங்கள் முழங்கப்பட்டன.
அமெரிக்காவில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று தேங்க்ஸ் கிவிங் எனப்படும் நன்றி தெரிவிக்கும் விழா. இந்த விழாவையொட்டி அமெரிக்காவில் தேசிய விடுமுறை விடப்படுவது வழக்கம்.
அமெரிக்கர்கள் குடும்பம் குடும்பமாக சர்ச்சுகளுக்குச் சென்று கடவுளுக்கு நன்றி செலுத்தி சிறப்புப் பிரார்த்தனைகள் செய்வது வழக்கம். வட அமெரிக்காவில் உள்ள ஐரோப்பியர்களால் முதன் முதலாக கடந்த 1578ம் ஆண்டு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன் பின்னர் இது ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு நன்றி தெரிவிக்கும் விழாவும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு ஒரு முக்கிய அம்சமாக, நிவேதா மாநிலத்தில் உள்ள ரெனோ நகரில் உள்ள ட்ரினிட்டி எபிஸ்கோபல் சர்ச்சில், இந்துக்களின் வேதங்களில் ஒன்றான ரிக் வேதம், பகவத் கீதை, உபநிஷத்துக்களிலிருந்து வேத மந்திரங்கள் முழங்க நன்றி தெரிவிக்கும் பிரார்த்தனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் வசித்து வரும் பிரபல இந்து புரோகிதர் ராஜன் ஷெட் இந்த வேத மந்திரங்களை உச்சரித்து சிறப்புப் பிரார்த்தனை நடத்தினார்.
காயத்ரி மந்திரத்தில் ஆரம்பித்து, பகவத் கீதையின் 2ம் பாகத்திலிருந்து சில வரிகளையும், ரிக் வேதத்தின் 10வது அத்தியாயத்திலிருந்து சில பகுதிகளையும் ராஜன் வாசித்தார். காரியங்கள் மற்றும் காரியங்களால் ஏற்படும் பலன்கள், இதயங்களை அன்பினால் ஒருங்கிணைப்பது ஆகியவற்றை வலியுறுத்தும் வாசகங்களை அவர் இதன் மூலம் விவரித்தார்.
முதல் முறையாக இடம் பெற்ற இந்த வழிபாட்டை சர்ச்சுக்கு வந்திருந்தவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு கவனித்தனர். அனைவரும் இந்த வித்தியாசமான வழிபாட்டை வரவேற்றனர். இந்து வேதங்களில் கூறப்பட்டுள்ள உயரிய கருத்துக்களை வரவேற்று கைதட்டி மகிழ்ந்தனர்.












Click it and Unblock the Notifications