அரசு தலைமை வழக்கறிஞர் விடுதலை திடீர் ராஜினாமா
சென்னை: தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் (அட்வகேட் ஜெனரல்) ஆர்.விடுதலை திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய தலைமை வழக்கறிஞராக ஜி.மாசிலாமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் தமிழக அமைச்சர் ராகவானந்தத்தின் மகன்தான் ஆர்.விடுதலை. திமுக ஆட்சிக்கு வந்ததும் அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார் விடுதலை. விடுதலையின் ராஜினாமாவை அரசு ஏற்றுக் கொண்டது. அவருக்குப் பதில் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ஜி.மாசிலாமணி நியமிக்கப்பட்டார்.
சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் பணியாற்றியுள்ள மாசிலாமணி, மூத்த வக்கீல் ஆவார். அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞராகவும் அவர் பணியாற்றியுள்ளார். 26ம் தேதி அவர் அரசு தலைமை வழக்கறிஞராக பதவியேற்றுக் கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொந்தக் காரணங்களுக்காக ராஜினாமா செய்துள்ளதாக விடுதலை கூறியுள்ளார். இருப்பினும் இதன் பின்னணியில் வேறு சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக அரசு சம்பந்தப்பட்ட பல வழக்குகளில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வந்தது. முத்தாய்ப்பாக, சென்னையில் அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடிப்பதை தடுக்கும் தமிழக அரசின் அவசரச் சட்டம் செல்லாது என்று சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம்
தீர்ப்பளித்தது. இதுவே விடுதலையின் பதவிக்கு வேட்டு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications