பெண்னை மிரட்டிய வழக்கில் டிஎஸ்பி மீது வழக்கு!
சிவகங்கை: பெண்ணை மிரட்டிய டி.எஸ்.பி. மீது வழக்குப் பதிவு செய்ய போலீஸாருக்கு, மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, ஆறுமுகம் தெருவை சேர்ந்தவர் ராஜசேகரன். அவரது மனைவி கீதா. இவரிடமிருந்து, கல்லூரி சாலையில் வசிக்கும் சண்முகம் என்பவர் ரூ. 20,000 கடன் பெற்று இருந்தார். ஆனால் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருந்து வந்தார்.
இதையடுத்து கீதா, சிவகங்கை எஸ்.பியிடம் புகார் கூறினார். புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு குற்றப்பிரிவு டிஎஸ்பி எபினேசருக்கு, எஸ்.பி. உத்தரவிட்டார்.
ஆனால் வழக்கை விசாரித்த எபனேசர், புகார் கொடுத்த கீதாவை அழைத்து புகாரை வாபஸ் பெறுமாறும், இல்லாவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக தெரிகிறது.
இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் கீதா மனு செய்தார். அதில், கொலை மிரட்டல் விடுத்த டி.எஸ்.பி. மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், டிஎஸ்பி எபினேசர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டது. அதன் பேரில் எபனேசர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது எபனேசர் புதுக்கோட்டை குற்றப் பிரிவு டி.எஸ்.பியாக பணியாற்றி வருகிறார்.












Click it and Unblock the Notifications