புலி ஆதரவு கூட்டங்களுக்குத் தடை: எதிர்த்து பெரியார் தி.க. வழக்கு
சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து கூட்டங்கள், இரங்கல் கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்துவதற்கு தமிழக டிஜிபி விதித்துள்ள தடையை ரத்து செய்யக் கோரி பெரியார் திராவிடர் கழகம் சதார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் துணைத் ஆணூர் ஜெகதீசன் தாக்கல் செய்துள்ள மனுவில், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக கூட்டங்கள், இரங்கல் கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தத் தடை விதித்து டிஜிபி சமீபத்தில் உத்தரவிட்டுள்ளார். அப்படிச் செய்வோர் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் வைக்கப்பட்டிருந்த மறைந்த விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் பேனர்களை போலீஸார் அகற்றி வருகின்றனர். மேலும், தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கை அரசைக் கண்டித்து வைக்கப்பட்டிருந்த பேனர்களையும் கூட அகற்றியுள்ளனர்.
சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது. சட்டவிரோத செயல்களைச் செய்தால் மட்டுமே தடுக்க முடியும்.
முதல்வர் கருணாநிதியே, தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கவிதை எழுதியுள்ளார். எனவே முதல்வர் கருணாநிதியுடன் ஆலோசனை செய்யாமல் தன்னிச்சையாக டிஜிபி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வைக்கப்பட்டுள்ள பேனர்கள், கட் அவுட்கள் உள்ளிட்டவற்றை அகற்றக் கூடாது என்று டிஜிபிக்குத் தடை விதிக்க வேண்டும்.
மேலும், எடுக்கப்பட்ட பேனர்கள், கட்அவுட்டுகள், போஸ்டர்களை திரும்பத் தர வேண்டும் என டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெகதீசன்.












Click it and Unblock the Notifications