15ம் தேதி முதல் மதுரை பாஸ்போர்ட் அலுவலகம் திறப்பு

மதுரை: மதுரையில் நிறுவப்பட்டுள்ள பாஸ்போர்ட் அலுவலகம் வருகிற 15ம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே முதல் முறையாக முற்றிலும் குளிரூட்டப்பட்ட அலுவலகம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தற்போது சென்னை, திருச்சி ஆகிய இடங்களில் முழு அளவிலான பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளன. கோவையில் சமீபத்தில் புதிய பாஸ்போர்ட் அலுவலகம் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் தென் மாவட்ட மக்களின் வசதிக்காக மதுரையில் புதிய பாஸ்போர்ட் அலுவலகம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து மதுரையிலும் பாஸ்போர்ட் அலுவலகம் அமைக்கப்படும் என சமீபத்தில் நாடாளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து மதுரை பாஸ்போர்ட் அலுவலகம் தொடர்பான பணிகள் தொடங்கின. பாஸ்போர்ட் அலுவலகத்திற்காக ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள ஒரு அரசு அலுவலகம் ஒதுக்கப்பட்டது.
இந்த அலுவலகம் ரூ. 50 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அலுவலகம் முழுமையும் குளிரூட்டப்பட்டுள்ளது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட முதல் தமிழக பாஸ்போர்ட் அலுவலகம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அலுவலகத்தில் அதி நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. காத்திருப்போருக்கான தனி அறை, குழந்தைகளுக்கான தனி அறை என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
வருகிற 15ம் தேதி இந்த அலுவலகம் திறக்கப்படுகிறது. அலுவலகத்தை பாஸ்போர்ட் அதிகாரி சுவாமிநாதன் நேற்று பார்வையிட்டார். பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிப்போருக்கு உடனடியாக வழங்கும் வகையில் இங்கு நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அப்போது சுவாமிநாதன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications