திமுக இளைஞரணி மாநாடால் பள்ளி, கல்லூரி தேர்வு தேதி மாற்றம்
நெல்லை: நெல்லையில் நடைபெறவுள்ள திமுக இளைஞரணி மாநாட்டை தொடர்ந்து வரும் 14, 15ம் தேதிகளில் நெல்லையில் நடைபெறுவதாக இருந்த பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
நெல்லையில் வரும் 15, 16 தேதிகளில் திமுக இளைஞரணி மாநாடு நடக்கிறது. இதில் முதலமைச்சர் கருணாநிதி, உள்ளாட்சி துறை அமைச்சர் மு.கா.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்கின்றனர்.
மாநாட்டிற்கு தமிழகம் முழுவதும் இருந்து லட்சகணக்கானவர்கள் வரக்கூடும் என்பதால் பல மாவட்டங்களிலும் இருந்து பாதுகாப்பு பணிக்கு போலீசார் வரவழைக்கப்படுகின்றனர். இவர்களை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் வரும் 11ம் தேதி நெல்லை மாவட்ட பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்வு தேதி தற்போது திடீரென மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு வரும் 8ம் தேதி துவங்கும் தேர்வுகள் 20ம் தேதி முடிவடைகிறது. 6-10 வரையுள்ள வகுப்புகளுக்கு வரும் 10ம் தேதி துவங்கும் தேர்வுகள் வரும் 20ம் தேதி முடிவடைகிறது.
மேலும் வரும் 14ம் தேதி அன்று விருப்பபட்டால் பள்ளிகளை நடத்திக் கொள்ளலாம் என்று கல்வித் துறையின் மூலம் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எனவே பெரும்பாலான பள்ளிகள் அன்றைய
தினத்தை விடுமுறையாக அறிவித்துவிடும் என்று தெரிகிறது.
இதுபோல் நெல்லை மனோமணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தின் தொலை தொடர்பு கல்வி இயக்கத்தின் சர்பில் வரும் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்த இளங்கலை, முதுகலை,
பட்டயப் படிப்பு மற்றும் எம்.பில் தேர்வு தேதிகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
வரும் 14ம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் வரும் 27தேதிக்கும், வரும் 15ம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் வரும் 28ம் தேதிக்கும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications