இலவச கலர் டிவி வழங்கும் நிகழ்ச்சியில் திமுக- தேமுதிகவினர் மோதல்
சென்னை: சென்னையில் அரசின் இலவச கலர் டிவி வழங்கும் நிகழ்ச்சியில் தேமுதிகவினருக்கும் திமுகவினருக்கும் இடையே மோதல் மூண்டது. கல்வீச்சு நடந்ததையடுத்து 20 தேமுதிகவினர் கைது செய்யப்பட்டனர்.
வியாசர்பாடியில் சர்மாநகர் ஏபிஆர் திருமண மண்டபத்தில் 35 வட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு இன்று அரசின் இலவச கலர் டிவி வழங்கும் விழா நடைபெறுவதாக இருந்தது. இந்த வட்டத்தில் மொத்தம் 9,600 பேரிடம் ரேஷன் கார்டுகள் உள்ளன.
ஆனால் இன்று வெறும் 3,500 பேருக்கு மட்டுமே கலர் டிவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த டிவிக்களை பெறுபவர்களுக்கு நேற்றே டோக்கனும் வழங்கப்பட்டது.
இதற்கு 35வது வட்ட தேமுதிக கவுன்சிலர் சேகர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ரேஷன் கார்டு வைத்து இருக்கும் 9,600 பேருக்கும் இன்றே டிவி வழங்க வேண்டும் என்று கோரி அதிகாரிகளுடன் பேசிப் பார்த்தார். ஆனால், எந்தப் பலனும் ஏற்படவில்லை.
இந் நிலையில் இன்று காலை சேகர் தலைமையில் வட சென்னை மாவட்ட தேமுதிக செயலாளர் தியாகராஜன், மத்திய சென்னை மாவட்ட தேமுதிக செயலாளர் செந்தாமரைக் கண்ணன், மாணவர் அணிச் செயலாளர் வேல்முருகன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தேமுதிகவினர் விழா நடக்கும் இடத்துக்கு வந்தனர்.
35வது வட்டத்தில் ரேசன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் இலவச டிவி கொடுக்க வேண்டும் எனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து 35வது வட்ட திமுக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் தேமுதிகவினருக்கும் இடையே மோதல் மூண்டது.
சாலை மறியலில் ஈடுபட்டிருந்த தேமுதிகவினர் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. இதில் இரு தேமுதிகவினருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
இந்த சாலை மறியலால் அப் பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இந் நிலையில் பஸ்கள் மீதும் கற்கள் வீசப்பட்டன. இதையடுத்து பயணிகள் அலறியபடி பஸ்களை விட்டு இறங்கி ஓடினர். இதனால் அப் பகுதியில் பெரும் பதற்றம் தொற்றிக் கொண்டது.
இந் நிலையில் அங்கு திமுகவினர் மொத்தமாக திரண்டனர். தேமுதிகவினருக்கும் அவர்களுக்கும் இடையே அடிதடி ஏற்படும் நிலை ஏற்பட்டதையடுத்து வியாசர்பாடி உதவி கமிஷனர் ஜெயக்குமார் அங்கு விரைந்து வந்து இரு தரப்பிற்கும் இடையே போலீசாரைக் குவித்தார்.
ஆனாலும் போலீசாரை மீறி இரு தரப்பும் அடிதடியில் இறங்க முயன்றதையடுத்து போலீசார் இரு தரப்பினர் மீதும் தடியடி நடத்தி அவர்களை ஓட விட்டு சிதறடித்தனர். இதைத் தொடர்ந்து அங்கு அமைதி திரும்பியது.
பின்னர் விழாவை நடத்த உதவுமாறு தேமுதிகவினருடன் உதவி கமிஷனர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து கவுன்சிலர் சேகர் உள்ளிட்ட தேமுதிகவினர் கைது செய்யப்பட்டு போலீஸ் பஸ்களில் ஏற்றப்பட்டனர். கைதானவர்களில் 20 பேர் பெண்கள் ஆவர்.












Click it and Unblock the Notifications