சுயநலத்திற்காக கட்சி ஆரம்பிக்கும் தலைவர்கள் - ஸ்டாலின் தாக்கு

Subscribe to Oneindia Tamil

M.K.Stalin

திருநெல்வேலி: இப்போதெல்லாம் தங்களின் சுயநலத்தைக் கருதியே சில தலைவர்கள் கட்சி ஆரம்பிக்கின்றனர். ஆனால் திமுக கொள்கை, லட்சியப் பிடிப்புடன் கூடிய கட்சி என்று உள்ளாட்சித் துறை அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

நெல்லையில் நேற்று தொடங்கிய திமுக இளைஞர் அணி முதல் மாநில மாநாட்டின் 2வது நாளான இன்று காலை மு.க.ஸ்டாலின் தொடக்க உரை நிகழ்த்தினார். மாநாட்டின் நோக்கம் குறித்தும், இளைஞர் அணியின் செயல்பாடுகளை விவரித்தும் அவர் பேசினார்.

மு.க.ஸ்டாலின் பேச்சு:

இளைஞர்களை ஊக்குவிக்கவும், உற்சாகப்படுத்தவும், அவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து நெல்லையில் ஒரு மிகப்பெரிய இளைஞர் அணி மாநாட்டை நடத்தி காட்ட வேண்டும் என்று தலைவர் கலைஞரும், பேராசிரியர் அன்பழகனும், அமைச்சர்களும் என்னிடம் கூறி அதற்கு அனுமதியும் வழங்கினர்.

அதன் பின்னர் நான் அனைத்து மாவட்ட அமைப்பாளர்களையும் அழைத்து கலந்து பேசினேன். அந்த ஆலோசனை கூட்டத்தில் மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களையும் வடிவமைத்தேன்.

அந்த நேரத்தில் தமிழகம் முழுவதும் மாவட்ட இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று அறிவித்தேன். அந்த கூட்டங்களில் என்னையும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட அமைப்பாளர்கள் அழைப்பு விடுத்தனர். நான் தென் பகுதியில் உள்ள மாவட்டங்களுக்கு மட்டும் சென்று கூட்டங்களில் கலந்து கொண்டேன்.

அப்போது அங்கு கூடிய கூட்டத்தை பார்த்ததும் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்தேன். அதன் அடிப்படையில் இன்று இந்த சிறப்பான் மாநாட்டை நாம் நடத்துகிறோம்.

இளைஞர் அணியின் அணிவகுப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பலர் திட்டம் தீட்டினர். வழக்கும் போடப்பட்டது. தற்போது தமிழகத்தில் எதிர்கட்சியாக செயல்படும் அதிமுக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மாநாட்டுக்கு தடை விதிக்குமாறு கேட்டுக் கொண்டது.

அந்த மனுவில் பாளையங்கோட்டை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் மாநாட்டுக்கு 5 லட்சத்துக்கும் குறையாமால் இளைஞர் அணியினர் வருவார்கள். அதனால் மைதானம் பாதிக்கப்படும் என்று கூறியிருந்தனர்.

ஆனால் உயர் நீதிமன்றம் அவர்களின் மனுவை தள்ளுபடி செய்து நமக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது. இந்த மாநாட்டில் அதிமுகவினர் எதிர்பார்த்ததை விட 2 மடங்கில் இளைஞர் அணியினர் கலந்து கொண்டு பிரமிக்க செய்துள்ளனர்.

வெள்ளையனை எதிர்த்து வீரமுழமிக்கமிட்ட எண்ணற்ற தலைவர்கள் இந்த நெல்லை பூமியில் தான் பிறந்து வாழ்ந்து சிறை வாசத்தையும் அனுபவித்துள்ளனர். அதில் சித்தரஞ்சன் தாஸ், கப்பலோட்டிய தமிழன் வஉசி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உள்ளிட்ட பலர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

தமிழ் மொழிக்கு தொண்டாற்றி வரும் இதே நெல்லையில் உ.வே.சாமிநாத அய்யர், வீரவாஞ்சி, காயிதே மில்லத் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் பிறந்து வளர்ந்துள்ளனர்.

தத்துவார்த்த சிந்தனைகளை ஏற்படுத்தி புரட்சிகரமான மாற்றத்தை உருவாக்க 1980ம் ஆண்டு மதுரை ஜான்சி ராணி பூங்காவில் தொடங்கப்பட்ட இந்த இளைஞர் அணி இன்று தனது முதல் மாநில மாநாட்டை நடத்தி சிறப்பு செய்துள்ளது.

திடீர் கட்சிகள் - திடீர் தலைவர்கள்:

திடீர் திடீரென்று கட்சிகள் வருகிறது. பல புதிய தலைவர்கள் வருகிறார்கள். அவர்கள் வந்துவிட்டு போகட்டும். லட்சியம், குறிக்கோளற்ற கட்சிகளாகவே அவைகள் உள்ளன. நம் திமுகவோ 1949ல் தொடங்கப்பட்டு 1957ல் முதல் தேர்தலை சந்தித்து வளர்ச்சி பெற்று வந்துள்ளது.

அதுவும் முதல் தேர்தல் களத்தில் போட்டியிட கட்சி தலைவராகிய அண்ணாவோ, நம் தலைவர் கலைஞரோ, பேராசிரியர் அன்பழகனோ மற்றும் கழக முன்னோடிகளோ முடிவெடுக்கவில்லை. திருச்சி முதல் மாநாட்டில் பொதுமக்கள் மத்தியில் வாக்கு பெட்டிகள் அமைத்து தேர்தல் களத்தில் நிற்க முடிவெடுக்கப்பட்டது.

இது பொதுமக்கள் நமக்கு அளித்த வாய்ப்பு. அதன்படியே நாம் திறம்பட செயலாற்றி சேவை புரிந்து வருகிறோம். ஆனால் தற்போது சிலர் தங்களை அடையாளம் காட்டிக் கொள்வதற்காக அரசியல் கட்சி தொடங்குகிறார்கள். இதை அவர்கள் பகுதி நேர தொழிலாக கொண்டுள்ளனர்.

திமுக தொடங்கப்பட்டது முதல் இன்று வரை எத்தனையோ தலைவர்கள் வந்து விட்டார்கள், எத்தனையோ கட்சிகள் பிறந்து விட்டன. ஆனால் அவர்களில் எத்தனை பேருக்கு மக்களிடையே அங்கீகாரம் கிடைத்தது, எத்தனை பேர் மக்கள் செல்வாக்கைப் பெற்றனர் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கிண்டல் செய்யும் மாநாடு அல்ல:

இந்த மாநாடு மற்ற புதிய அரசியல் தலைவர்களை கிண்டல் செய்வதற்காக நடத்தவில்லை. லட்சியம், குறிக்கோளுக்காக நடத்தப்படுகிறது.

அடுத்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை, நூற்றாண்டு விழாவாக நாம் கொண்டாடுவோம். இங்கு வந்திருக்கும் இளைஞர்களாகிய நாம் அறிஞர் அண்ணாவின் வழிமுறைகளை பின்பற்றிட வேண்டும் என்றார் ஸ்டாலின்.

ரத்து செய்தவர் - கொண்டு வந்தவர் கருணாநிதி:

முன்னதாக மாநாட்டுப் பந்தலை இள.புகழேந்தி திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், 14 வயதில் தமிழ் வாழ்க என்று கூறி கொடி பிடித்தவர் கலைஞர். அப்போது தான் ஒரு எம்.எல்.ஏவாக வருவோம் என்றோ, அமைச்சர் ஆவோம் என்றோ, முதல்வர் ஆவோம் என்றோ அவர் நினைத்ததில்லை. அப்படி எண்ணி செயல்பட்டதும் கிடையாது.

ஜெயலலிதா பல மக்கள் நலத் திட்டங்களை ரத்து செய்தவர். ஆனால் அவற்றையெல்லாம் கருணாநிதி மீண்டும் கொண்டு வந்தார்.

இலவச பஸ் பாஸ் திட்டத்தை ரத்து செய்தவர் ஜெயலலிதா. அதைக் கொண்டு வந்தவர் கருணாநிதி. ஆதி திராவிட மக்கள் படிப்பதையே விரும்பாதவர் ஜெயலலிதா. அவர்களின் கல்விக்கு முட்டுக்கட்டை போட்டவர். ஆனால் ஆதி திராவிடர்களின் உயர்வுக்காக பல திட்டங்ளைக் கொண்டு வந்தவர் கருணாநிதி.

தனது ஆட்சியின்போது சட்டக் கல்வி மாணவர்களுக்கான கட்டணத்தை ரூ. 17 ஆயிரமாக அதிகரித்தவர் ஜெயலலிதா. ஆனால் அதைக் குறைத்தவர் கருணாநிதி என்றார் புகழேந்தி.

சூடாக விற்ற கருணாநிதி சிடி:

இதற்கிடையே மாநாட்டுப் பந்தலில் கட்சி தொடர்பான ஆடியோ கேசட்டுக்ள், சிடிக்கள், கொடிகள், ஸ்டிக்கர்கள் போன்றவையும் படு சூடாக விற்றன.

குறிப்பாக அண்ணா மறைந்தபோது கருணாநிதி பாடிய இரங்கல் கவிதை வானொலியில் அப்போது ஒலிபரப்பப்பட்டது. அந்தக் கவிதையை சமீபத்தில் முதல்வர் கருணாநிதி, கலைஞர் டிவியில் பாடினார். அந்தக் கவிதை இன்றைய மாநாட்டின்போது ஒளிபரப்பு செய்யப்பட்டது.

மேலும் சிடி வடிவிலும் அது விற்கப்பட்டது. ஒரு சிடியின் விலை ரூ. 500 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் விலையைப் பொருட்படுத்தாமல் தொண்டர்கள் அலை அலையென அதை வாங்கிச் சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+