ஜெயாவின் பழைய நினைப்புடா பேராண்டி: துரைமுருகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விடுதலைப் புலிகளுக்கு பட்டவர்த்தனமாக ஆதரவு தெரிவித்து வரும் வைகோவை ஜெயலலிதா விமர்சிக்காதது ஏன் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

நாள் தவறினாலும் அறிக்கை மூலமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிற ஜெயலலிதா நேற்றைய தினம் விடுத்துள்ள அறிக்கையில் மத்திய அரசிலே உள்ளவர்கள் இன்னமும் தன்னுடைய ஆலோசனையை கேட்டுக் கொண்டு தான் நடக்கிறார்கள் என நினைத்துக் கொண்டு, மத்திய அரசு கூட்டியுள்ள ஒரு கூட்டத்திற்கு தமிழக அரசின் முதல்வர் என்ற முறையிலே கருணாநிதியை அழைத்திடக் கூடாது என்ற வகையில் கருத்தினைத் தெரிவித்திருக்கிறார்.

மத்திய அரசோ அதிலே உள்ள அமைச்சர்களோ யாரும் இந்த அம்மையாரைத் திரும்பி பார்க்கக் கூடத் தயாராக இல்லை. ஆனால் இன்னுமும் பழைய நினைப்புடா பேராண்டி என்பதை போல முதல்வர் கருணாநிதியைப் பற்றி யாரோ எழுதிக் கொடுத்த அறிக்கையிலே கையெழுத்திட்டு பத்திரிக்கைகளில் அவை வராதா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்.

தனது தோழமைக் கட்சிகளை இவர் மதிப்பதை போலத்தான் மற்ற கட்சிகளும் மதிப்பார்கள் என்று கருதிக் கொண்டு விடுதலை சிறுத்தைகள் இயக்கத் தலைவர் திருமாவளவன், முதல்வர் சொல்லித்தான் கூறியிருப்பார் என்றும் ஜெயலலிதா கதை அளந்திருக்கிறார்.

விடுதலைப் புலிகளுக்கு திமுக கழக அரசு வெளிப்படையாக ஆதரவு அளித்து வருவதை போல தொடர்ந்து ஜெயலலிதா அறிக்கை மேல் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்.

விடுதலைப் புலிகளுக்கு எம்ஜிஆர் உதவி செய்ததை போல கருணாநிதி செய்யவில்லை என்றும், பங்களாதேஷ் பிரச்சனையில் இந்திய அரசு உதவி செய்ததை போல விடுதலைப் புலிகளுக்கு இந்திய அரசு உதவிட முன் வரவேண்டுமென்றும், விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனுக்கு ஏதாவது ஒரு தீங்கு நேரிட்டால் அதை தமிழ்ச் சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது என்றும் ஜெயலலிதா கொடுத்த பேட்டிகள் இன்னும் பழைய ஏடுகளில் அப்படியே உள்ளன.

அதையெல்லாம் மறந்துவிட்டு தற்போது ஜெயலலிதா விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளராக மாறி, அவர்களுக்கு எதிராக அறிக்கை விடுவது மட்டுமல்லாமல், திமுக கழக அரசு அவர்களை ஆதரிப்பது போலவும் கூறிக் கொண்டிருக்கிறார்.

ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் 1999ல் உறுதி செய்து 8 ஆண்டுகள் ஆகியும் அது இன்னமும் நிறைவேற்றப்படவில்லையே. அது ஏன் என்று ஜெயலலிதா தனது அறிக்கையிலே கேட்டிருக்கிறார்.

யாரைப் பார்த்து இந்தக் கேள்வியை அவர் கேட்கிறார். 2001-2006ம் ஆண்டு வரை தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா இருந்தார். அப்போது என்ன செய்து கொண்டிருந்தார். இப்போது யாரைப் பார்த்து கேள்வி கேட்கிறார்.

வன்முறையைப் பற்றி ஜெயலலிதா அறிக்கையிலே கூறியிருக்கிறார். வன்முறைக்கு அகராதியை எடுத்துப் பார்த்து அர்த்தம் தேடினால் அதற்கு ஜெயலலிதா என்று போட்டிருந்தால் தானே பொருத்தமாக இருக்கும். இவரது ஆட்சியில் நடக்காத வன்முறைகளை இன்னொரு ஆட்சியிலே நடந்துவிடப் போகிறது.

விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தைச் சேர்ந்த வன்னியரசு என்பவர் நீதிமன்றத்தினால் ஜாமீனில் விடப்பட்டதற்கு முதல்வர் கருணாநிதி தான் காரணம் என்று தொடர்ந்து ஜெயலலிதா புலம்பி வருகிறார்.

நீதிமன்றம் ஜாமீனில் ஒருவரை விடுவித்தால் கூட, அதற்கு அரசும், முதல்வரும் தான் பொறுப்பா. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அப்படித்தான் நடைபெற்றதா.

தமிழக முதல்வர் ஏதோ தேச துரோகம் செய்து விட்டதாக ஜெயலலிதா தொடர்ந்து ஒரு கருத்தைச் சொல்லி வருகிறார். இதுகுறித்து நீதிமன்றத்திற்கே சென்று அவர் மீது வழக்கு தொடர வேண்டும்.

கருணாநிதி ஆட்சி காலத்திலே இருந்த போது ஜெயலலிதாவை போல வழக்குகளை சந்தித்துக் கொண்டிருக்கிறாரா அல்லது அரசாங்க நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கி தன் பெயரிலும், தன் தோழி பெயரிலும் பட்டா போட்டுக் கொண்டாரா. இல்லையென்றால் கொடநாடு எஸ்டேட்டை வாங்கினாரா.

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களான ஆண்டன் பாலசிங்கம், தமிழ்செல்வன் ஆகியோருக்கு கருணாநிதி இரங்கல் தெரிவிக்கலாமா என்பது பற்றி ஜெயலலிதா மீண்டும் மீண்டும் பெரிய குற்றமாகக் கூறுகிறார். ஒருவர் இறந்ததற்காக இரங்கல் தெரிவிப்பது என்பது மனித நேயப்பாடு. அதற்கும் அம்மையாருக்கும் வெகு தூரம்.

மத்திய அரசை பார்த்து முதல்வர் கருணாநிதி எப்படி மத்திய அரசின் கூட்டத்திற்கு அழைத்தீர்கள் என்று கேட்கிறார். அதற்கு வேறு ஒன்றும் காரணமில்லை. இந்த அம்மையாருக்கு பொறாமை, வயிற்றெரிச்சல் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதன் காரணமாக இப்படியெல்லாம் அறிக்கை விடுகிறார்.

தமிழகத்தில் அரசு நன்றாக நடைபெறுகிறது. உதாரணத்திற்கு இன்று கூட மிகப்பெரிய நடவடிக்கையாக தேனி மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு தான் நுழைந்ததாக கூறப்படும் 5 நக்சலைட்டுகள் தமிழக காவல்துறையினரின் திறமையான முயற்சியின் காரணமாக பிடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் இயக்கத் தலைவர் திருமாவளவன் பேசுவதை பற்றி அறிக்கை விடும் ஜெயலலிதா, அதே கருத்தை எதிரொலித்து அறிக்கை விடும் வைகோவிற்கு எதிராக வாய் திறக்காமல் இருக்க என்ன காரணம்.

இந்தியா-இலங்கை அரசுக்கு ராணுவ உதவி செய்யக் கூடாதென்று விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பட்டவர்த்தனமாக வைகோ பிரதமருக்கு கடிதமே எழுதியிருக்கிறாரே. அதைப்பற்றி ஜெயலலிதா அம்மையார் விமர்சிக்காததற்கு என்ன காரணம். ஒரேயொரு துணையாக இருக்கும் அவரையும் இழந்துவிடக் கூடாது என்பது தானோ.

முதலில் ஜெயலலிதா இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டு, அதன் பின்னர் திமுகவை பற்றியும், முதல்வர் கருணாநிதியைப் பற்றியும் அறிக்கைவிட முன்வரட்டும் என்று துரைமுருகன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+