பெனாசிர் கொலை: அல்-கொய்தா பொறுப்பேற்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ நேற்று ராவல்பிண்டி அருகே அடையாளம் தெரியாத இருவரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் அந்த இருவரும் தங்களது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பெனாசிருக்கு ஏற்கனவே பல்வேறு தீவிரவாத அமைப்புகளிடமிருந்து கொலை மிரட்டல்கள் இருந்ததால் யார் அவரைக் கொன்று என்பது தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில் அல் கொய்தா அமைப்பு பெனாசிர் படுகொலைக்கு பொறுப்பேற்றுள்ளது.
இத்தாலியில் உள்ள ஒரு செய்தி நிறுவனத்தை இன்று தொடர்பு கொண்ட அல் கொய்தா அமைப்பின் தலைவர்களில் ஒருவரான அல் யாசின் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
பெனாசிர் படுகொலைக்கு தாங்கள் பொறுப்பேற்பதாக அவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில், பெனாசிர் பூட்டோ அமெரிக்காவின் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். மேலும் எங்களது அமைப்பையும் ஒழித்துக் கட்ட அவர் தீவிரமாக இருந்து வந்தார்.
இதனால்தான் அவரைக் கொல்ல நேரிட்டு விட்டது. அல் கொய்தா அமைப்பின் 2வது நிலை தலைவரான அல்ஜவாஹிரிதான் பெனாசிர் பூட்டோவைக் கொல்லும் முடிவை எடுத்தார். இதையடுத்து திட்டத்தை நிறைவேற்ற தற்கொலைப் படைகள் அமைக்கப்பட்டன. அதில் ஒரு பிரிவுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்றும் அல் யாசின் கூறியுள்ளார்.
தான் எங்கிருந்து பேசுகிறேன் என்பதை அல் யாசின் தெரிவிக்கவில்லை என்று இத்தாலிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எப்.பி.ஐ:
இதற்கிடையே பெனாசிரைக் கொல்ல அல் கொய்தாவின் தலைவரான ஒசாமா பின் லேடனும், அந்த அமைப்பின் நம்பர் டூ ஆன அய்மான் அல் ஜவாஹிரியும் கடந்த அக்டோபரிலேயே திட்டம் தீட்டியதாக அமெரிக்காவின் எப்.பி.ஐ. தெரிவித்துள்ளது.
இன்று உடல் அடக்கம்:
இதற்கிடையே, பெனாசிரின் உடல் இன்று அவரது சொந்த ஊரான சிந்து மாகாணம், லர்ஹானாவில் அடக்கம் செய்யப்படுகிறது. இதையொட்டி அங்கு அவரது கட்சியினர் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர்.
பாகிஸதானில் இன்று 2வது நாளாக பெரும்பாலான பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் தொடருகின்றன. பல ஊர்களில் கலவரம் வெடித்துள்ளது.












Click it and Unblock the Notifications