பாகிஸ்தானில் பெரும் கலவரம் - பலர் பலி

பெனாசிர் பூட்டோ கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானின் பல பகுதிகளில் கலவரம் வெடித்தது. இதில் பலர் பலியானார்கள்.
ராவல்பிண்டி அருகே நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் பெனாசிர் பூட்டோ பலியான தகவல் பரவியதும் பாகிஸ்தானின் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் பெரும் கலவரம் வெடித்தது.
பெனாசிரின் சொந்த ஊரான கராச்சியில்தான் கலவரம் மிகப் பெரிய அளவில் இருந்தது. அங்கு நடந்த வன்முறைத் தாக்குதல்களில் 10 பேர் உயிரிழந்தனர். கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. வாகனங்கள் பல தீவைத்து எரிக்கப்பட்டன. கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன.
கராச்சியில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. காவல் நிலையமும் தாக்கப்பட்டது.
சிந்து மாகாணத்தில் போலீஸாருக்கும், பெனாசிர் கட்சியினருக்கும் இடையே பெரும் மோதல் மூண்டது. முஷாரப்பை எதிர்த்து கோஷமிட்டபடி பெனாசிர் கட்சியினர் வீதி வீதியாக சென்று போராட்டம் நடத்தினர்.
சாலை மறியல், கல்வீச்சு, கடையடைப்பு என சிந்து மாகாணமும் பாதிப்பை சந்தித்தது.
பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் தலை விரித்தாடின. இதில் பலர் பலியானாதாக கூறப்படுகிறது.
பதட்டமான மாகாணங்களில் ராணுவமும், துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
கதறி அழுத கணவர்:
பெனாசிர் உயிரிழந்தபோது அவரது கணவர் ஆசிப் அலி சர்தாரி அருகில் இல்லை. அவர் துபாய்க்குப் போயிருந்தார். நேற்று தனது 3 குழந்தைகளுடன் பாகிஸ்தான் திரும்பினார்.
பெனாசிர் அனுமதிக்கப்பட்டிருந்த ராவல்பிண்டி மருத்துவமனைக்கு அவர் விரைந்து சென்றபோது அவர் இறந்து போயிருந்தார். பெனாசிரின் உடலைப் பார்த்ததும் அடக்க முடியாமல் கதறி அழுதார் சர்தாரி. அருகில் இருந்தவர்கள் தேற்ற முயன்றும் முடியவில்லை.
முஷாரப் கண்டனம்:
பெனாசிர் பூட்டோ கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அதிபர் முஷாரப் கண்டனம் தெரிவித்துள்ளார். இது கோழைத்தனமானது என்று அவர் வர்ணித்துள்ளார்.
பாகிஸ்தான் தொலைக்காட்சியில் அவர் இதுகுறித்து பேசுகையில், இது வன்மையாக கண்டித்தக்கத்கது. தீவிரவாதிகளால் பாகிஸ்தானுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ஆனால் இதற்காகப் பயந்து விடாமல் தீவிரவாதிகளுக்கு எதிராகவும், தீவிரவாதத்திற்கு எதிராகவும் மக்கள் போராட வேண்டும்.
பெனாசிரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், 3 நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும். பாகிஸ்தான் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் என்றார் அவர்.
தேர்தலைப் புறக்கணிப்போம் - ஷெரீப்
இதற்கிடையே முஷாரப் அரசு அறிவித்துள்ள பொதுத் தேர்தலில் பங்கேற்காமல் புறக்கணிக்கப் போவதாக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.
பெனாசிர் பூட்டோ துப்பாக்கியால் சுடப்பட்டு ராவல்பிண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு நவாஸ் ஷெரீப் விரைந்து வந்தார்.
பின்னர் வெளியில் வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், முஷாரப் இருக்கும் வரை இந்த நாட்டில் அமைதியோ, ஜனநாயகமோ திரும்பாது.
இன்று நடந்துள்ள சம்பவத்திற்கும், பாகிஸ்தானின் இன்றைய நிலைக்கும் முஷாரப்பே பொறுப்பேற்க வேண்டும். உடனடியாக அவர் அதிபர் பதவியிலிருந்து விலக வேண்டும்.
இப்போது எனது உயிருக்கே கூட பாதுகாப்பு இல்லை. பெனாசிர் பூட்டோ கொல்லப்பட்ட சம்பவம் பாகிஸ்தானுக்கு பேரதிர்ச்சி ஆகும்.
பெனாசிர் பூட்டோ கொல்லப்பட்டுள்ள இந்த இக்கட்டான நிலையில், தேர்தல் நியாயமாக, நேர்மையாக நடைபெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. எனவே தேர்தலில் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என்றார் ஷெரீப்.












Click it and Unblock the Notifications