ஜன. 15 முதல் டெல்லியில் அடையாள அட்டை கட்டாயமாகிறது

டெல்லிக்கு எப்போதுமே தீவிரவாதிகளிடமிருந்து மிரட்டல் இருக்கிறது. நாடாளுமன்றம் தாக்கப்பட்டது முதல் டெல்லியில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தொடர்ந்து தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால், தீவிரவாதிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை ஒன்றை டெல்லி மாநில அரசு எடுத்துள்ளது.
அதன்படி டெல்லியில் வசிப்பவர்கள் கட்டாயம் ஏதாவது ஒரு அடையாள அட்டையுடன்தான் நடமாட வேண்டும். இதை ஜனவரி 15ம் தேதி முதல் கடுமையாக அமல்படுத்துமாறு மாநில ஆளுநர் தேஜிந்தர் கண்ணா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், போலீசார் கேட்கும் போது டெல்லியில் வசிப்பவர்கள் தாங்கள் டெல்லிவாசிகள் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் புகைப்பட அடையாள அட்டை ஏதாவது ஒன்றை காட்ட வேண்டும்.
வாக்காளர் அடையாள அட்டை, பான்கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒரு அடையாள அட்டையை காட்ட வேண்டும்.
வருகிற 15ம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. பணியாளர்களாக இருந்தால் தாங்கள் பணிபுரியும் அலுவலகம் வழங்கிய கார்டுகளையும், மாணவர்களாக இருந்தால் பள்ளி, கல்லூரிகளில் வழங்கிய அடையாள அட்டைகளை காண்பிக்கலாம்.
எனவே டெல்லிவாசிகள் வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது போலீசாரின் நடவடிக்கையால் ஏற்படும் சிரமத்தை தவிர்க்க மேற்கூறிய அடையாள அட்டைகளில் ஒன்றை எடுத்து செல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
அடையாள அட்டை இல்லாதவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் என்ன நடவடிக்கை என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.


Click it and Unblock the Notifications
