தமிழ் வழி பள்ளிகளை மூட கேரள அரசு முடிவு
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள தமிழ்ப் பள்ளிகளை மாணவர்கள் படிக்க வரவில்லை என்ற காரணத்தைக் காட்டி இந்தக் கல்வியாண்டுடன் மூடி விட அம்மாநில அரசு தீர்மானித்திருப்பதால் தமிழர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம், இடுக்கி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அரசு தமிழ் வழிப் பள்ளிக்கூடங்கள் உள்ளன. 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான இந்தப் பள்ளிக்கூடங்களில் தமிழ் வழியில் பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன.
மொத்தம் 200 பள்ளிக்கூடங்களும், 4 கல்லூரிகளும் உள்ளன. இந்த பள்ளி, கல்லூரிகளால் தமிழ் மாணவர்கள் பெரும் பயன் அடைந்து வருகின்றனர்.
ஆனால் இந்தப் பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை மட்டுமே தமிழ் வழிக் கல்வி உள்ளது. அதன் பின்னர் 11 மற்றும் 12ம் வகுப்புகளில் தமிழ் இல்லை. இதனால் மேல் நிலைக் கல்வியை தமிழில் கற்க முடியாத நிலை ஏற்படுகிறது.
மேலும் சமீப காலமாக தமிழ் வழிக் கல்வியின் மூலம் பள்ளி, கல்லூரிகளில் படிக்க தமிழ் மாணவர்களிடையே ஆர்வம் குறைய ஆரம்பித்துள்ளது. இதனால் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டு வருகிறது.
அதேசமயம், தனியார் பள்ளிகளில் படிக்க வசதியில்லாத பல ஏழை தமிழ் மாணவ, மாணவியர் இந்தப் பள்ளி, கல்லூரிகளில்தான் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாணவர் பற்றாக்குறையைக் காரணம் காட்டி இப்பள்ளிகளை மூடி விட கேரள அரசு திட்டமிட்டுள்ளதாம். இதனால் தமிழர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேல் நிலைக் கல்வியையும் தாய் மொழியிலேயே படிக்கலாம்,தேர்வுகளை எழுதலாம் என அரசு உத்தரவிட்டால் மாணவர்கள் மீண்டும் அதிக ஆர்வத்துடன் சேருவார்கள், பள்ளிகளை மூட வேண்டியிருக்காது என்று தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு பள்ளிகளை மூடக் கூடாது என கேரள அரசைக் கோர வேண்டும் என்றும் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்.












Click it and Unblock the Notifications