காத்திருக்கும் காளைகள் - ஜல்லிக்கட்டுக்கு கிடைக்குமா அனுமதி?
மதுரை: தமிழர்களின் வீர விளையாட்டு என பண்டைக்காலத்தில் வர்ணிக்கப்பட்டு, இப்போது உயிரைக் குடிக்கும் நிகழ்ச்சியாக பார்க்கப்படுகிற ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் அலங்காநல்லூர் மக்கள் காத்திருக்கின்றனர். ஜல்லிக்கட்டுக்காக காளைகளை தயார் செய்யும் பணியும் முழு வீச்சில் நடந்து வருகிறது.
பொங்கல் திருநாள் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது சுவையான இனிப்புப் பொங்கல். அடுத்து நினைவுக்கு வருவது சீறிப் பாயும் காளைகளுடன் மனிதக் காளைகள் மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டுதான்.
கேள்விக்குறியான வீர விளையாட்டு:
தமிழர்களின் வீர விளையாட்டாக பண்டைக்காலத்திலிருந்து கருதப்படுவது ஜல்லிக்கட்டு. அந்நாளில் ஒரு பெண்ணை மணக்க வேண்டுமானால், அந்த ஆண், முதலில் ஒரு காளையை அடக்க வேண்டும். அப்படி செய்தால்தான் பெண்ணைக் கொடுப்பார்களாம். அப்படிப்பட்ட வீர விளையாட்டு இன்று கேள்விக்குறியாகி மாறியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு கிராமங்களிலும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் களை கட்டும். சீறிப் பாயும் காளைகளை அடக்க போட்டி போட்டு பாயும் வீரர்களின் மயிர்க்கூச்செறியும் சாகசங்கள் பார்ப்பவர்களின் இதயத்தை தடதடக்கச் செய்யும்.
ஜல்லிக்கட்டுக்கு பெரும் பெயர் பெற்றது, உலகப் புகழ் பெற்றது மதுரை அருகே உள்ள அலங்காநல்லூர். இங்குதான் ஜல்லிக்கட்டு மயிர்க்கூச்செறியும் வகையில் இருக்கும். பெரும் திரளான காளைகளும், அதை அடக்க ஆயிரக்கணக்கான வீரர்களும் குவிவதால் அலங்காநல்லூரே அதிரும்.
அதேபோல அலங்காநல்லூருக்கு அருகே உள்ள பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஆகிய பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி விசேஷமானது. இதேபோல காரைக்குடி அருகே உள்ள சிராவயலில் மஞ்சு விரட்டு பிரபலமானது.
ஜல்லிக்கட்டு என்பது காளையை எதிர்கொண்டு பிடித்து அடக்குவதாகும். மஞ்சு விரட்டு என்பது, காளையை விரட்டி அதை பின்தொடர்ந்து சென்று பிடித்து அடக்குவதாகும்.
உயிர்ப்பலியால் எழுந்த சர்ச்சை:
ஆனால் சமீப காலமாக அதிகரித்து வந்த உயிர்ப் பலிகள், இந்த வீர விளையாட்டு குறித்து பெரும் சர்ச்சையை எழுப்பின. பெரும் கூட்டமாக காளைகள் மீது வீரர்கள் பாய்வதும், காளைகள் மருண்டு, அடக்க வரும் வாலிபர்களை தூக்கி வீசுவதும், அதில் பலர் உயிரிழப்பதும், இந்த வீர விளையாட்டு இன்றைய நாகரீக காலத்திற்குத் தேவைதானா என்ற கேள்வியை எழுப்பின.
மேலும், காளைகளுக்கு முரட்டுத்தனம் கூடுவதற்காக அவற்றுக்கு மது கொடுப்பது, நாசியில் மிளகாய்த்தூளை தூவுவது உள்ளிட்ட பல்வேறு சித்திரவைத செயல்களும் நடப்பதாக சர்ச்சைகள் எழுந்தன.
இந்த நிலையில்தான் அலங்காநல்லூரைச் சேர்ந்த ஒருவர் ஜல்லிக்கட்டை தடை செய்யக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றக் கிளை ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்தது.
இதை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். இந்த மனுவை பரிசீலித்த உயர்நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்திற்கு மட்டும் ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி அளித்தது. அதன்படி பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடந்தது. மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரே நேரடியாக மேற்பார்வையிட்டு எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் போட்டி நடக்க வழிவகுத்தார்.
தடை விலகுமா?
இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. ஜல்லிக்கட்டுக்களை நடத்துவோர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் வருகிற 17ம் தேதி திட்டமிட்டபடி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பிற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடக்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் முக்கியத்துவம், வரலாறு, பாரம்பரியம் உள்ளிட்டவற்றை விளக்கி, தகுந்த முன்னேற்பாடுகளுடன் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு எந்தவித பிரச்சினையும் இன்றி நடத்தப்பட்ட விதம் ஆகியவற்றை விளக்கி தடையை நீக்க வேண்டும், அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளு.
இந்த மனு வருகிற 11ம் தேதி விசாரணைக்கு வருகிறது. எனவே ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்குமா, காளைகள் சீறிப் பாய வாய்ப்பு கிடைக்குமா என்பது அன்று தெரிய வரும்.
போராட்டம்:
இதற்கிடையே ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் அலங்காநல்லூர், பாலமேடு, மேலூர் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
எதிர்ப்பு:
அதேசமயம், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என மனிதாபிமான குழுவின் தலைவர் ஜோசப் என்பவர் தமிழக முதல்வருக்கும், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
காளைகள் குழந்தைகள்:
இந்த நிலையில், ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடுகளில் அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஜரூராக மக்கள் இறங்கியுள்ளனர். காளைகளுக்கு பிராக்டிஸ் கொடுப்பது, சத்தான ஆகாரம் கொடுப்பது, கொம்புகளை சீவி ஷேப் செய்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து அலங்காநல்லூர் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ரகுபதி கூறுகையில், ஜல்லிக்கட்டு காளைகளை சிறப்பு உணவுகள் கொடுத்து எங்கள் வீட்டுக் குழந்தைகள் போல் வளர்த்து வருகிறோம். கடவுளின் கருணையுடன் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கும்
என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார் அவர்.
ரகுபதியின் நம்பிக்கை நிறைவேறுமா என்பது உச்சநீதிமன்றத்தின் கையில்தான் உள்ளது.












Click it and Unblock the Notifications