சாக்குப் பையில் 300 இறந்த கோழிகள் - காஞ்சி.யில் மக்கள் பீதி
காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரத்தில் 300க்கும் மேற்பட்ட கோழிகளின் இறந்த உடல் பாகங்கள் சாக்குப் பைகளில் போட்டு வீசப்பட்டிருந்ததால் அங்கு பறவைக் காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் பரவி வரும் பறவைக் காய்ச்சலால் நாட்டின் பல பகுதிகளிலும் பீதி நிலவுகிறது.
தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் இல்லை என்று மத்திய அமைச்சர் அன்புமணியும், மாநில கால்நடைத்துறை அமைச்சர் கீதா ஜீவனும் விளக்கியுள்ளனர். இருப்பினும் மக்களிடையே பீதி இருக்கத்தான் செய்கிறது.
இந்த நிலையில் சின்னக் காஞ்சிபுரத்தில் 300க்கும் மேற்பட்ட இறந்த கோழிகள் சாக்குப் பைகளில் போட்டு வீசப்பட்ட சம்பவம் அங்கு பறவைக் காய்ச்சல் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
சின்னக் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு பாலத்திற்கு அருகே இருக்கும் சுடுகாட்டில் 3 பெரிய சாக்குப் பைகள் கிடந்தன. அதை மீட்டுப் பார்த்தபோது அந்த பைகளுக்குள் இறந்த கோழிகள் இருந்தன. 300க்கும் மேற்பட்ட கோழிகள் அந்த பைகளில் இருந்தன.
இதையடுத்து வார்டு கவுன்சிலர் மனோகரன், நகராட்சி ஆணையர் வெங்கடேசனுக்கு தகவல் கொடுத்தார். அவர் விரைந்து வந்து சாக்குப் பைகளை மீட்க உத்தரவிட்டார். மேலும், அதிலிருந்து ஐந்து கோழிகள் சோதனைக்காக அனுப்பப்பட்டன. மற்றவை உடனடியாக புதைக்கப்பட்டன.
இறந்த கோழிகளை இங்கு வீசியது யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தோஷ் மிஸ்ரா இதுதொடர்பாக உத்தரவிட்டுள்ளார்.
இறந்த கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் வைரஸ் இருக்கிறதா, இல்லையா என்பதை கண்டறிந்து மக்களின் பயத்தைப் போக்கவும் அதிகாரிகளுக்கு ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
நூற்றுக்கணக்கான இறந்த கோழிகள் சாக்குப் பைகளில் போட்டு வீசப்பட்ட சம்பவம் சின்ன காஞ்சிபுரம் பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
