முஷாரப் - சர்தாரி சந்திப்பு?
இஸ்லாமாபாத்: படுகொலை செய்யப்பட்ட பெனாசிர் பூட்டோவின் கணவர் ஆசிப் அலி சர்தாரியை, அதிபர் முஷாரப் சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் அதை இரு தரப்பும் மறுத்துள்ளன.
முஷாரப்பும், சர்தாரியும் சமீப காலத்தில் சந்தித்துப் பேசியுள்ளது இதுவே முதல் முறையாகும். இந்த சந்திப்பின்போது பெனாசிர் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இருவரும் பேசியதாகத் தெரிகிறது.
ஆனால் இந்த சந்திப்பே நடைபெறவில்லை என்று இரு தரப்பு செய்தித் தொடர்பாளர்களும் மறுத்துள்ளனர்.
ஆனால் கராச்சியில் இந்த சந்திப்பு நடந்ததாக மற்றொரு செய்தி கூறுகிறது. இந்த சந்திப்பின்போது தேர்தலுக்கு முன்பும், தேர்தலுக்குப் பின்னரும் எப்படி செயல்படுவது என்பது குறித்து சர்தாரியுடன், முஷாரப் விவாதித்ததாக அந்த செய்தி கூறுகிறது.
மேலும், தேர்தலில் எந்தவித முறைகேடும் நடைபெறாது என முஷாரப் உறுதி அளித்ததாகவும், தேர்தல் சுதந்திரமாக நடைபெறும் என தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
பெனாசிர் பூட்டோவுக்கும், முஷாரப்புக்கும் இடையே ஏற்பட்ட ரகசிய ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாகவே இந்த சந்திப்பு நடந்ததாக அந்தத் தகவல் மேலும் கூறுகிறது.
இதுகுறித்து அதிபரின் செய்தித் தொடர்பாளர் ரஷீத் குரேஷி கூறுகையில், இப்படி ஒரு சந்திப்பு நடக்கவில்லை என்றார். அதேபோல பாகிஸ்தான் மக்கள் கட்சி செய்தித் தொடர்பாளர் பராஹத் உல்லா பாபரும் இதை மறுத்துள்ளார்.
முஷாரப், சர்தாரி சந்திப்பு குறித்து வெளியாகியுள்ள தகவலால் பாகிஸ்தானில் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications