புதிய தமிழ் புத்தாண்டு தினம்: பாஜக எதிர்ப்பு
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் திமுக கூட்டணியில் அங்கம் வகிப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க திமுக அரசு தயக்கம் காட்டுகிறது என பாஜகவின் மாநிலத் தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
பயங்கரவாதிகள் விஷயத்தில் மத்திய அரசு நளினமான, மெல்லிய போக்கை கடைபிடித்து வருகிறது. பயங்கரவாதிகள் மீது பாஜக நடவடிக்கை எடுத்ததை சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கை என்று திரித்து பிரசாரம் செய்தனர்.
விடுதலைப் புலிகள், நக்சலைட்டுகள், இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் போன்ற தடை செய்யப்பட்ட எந்த இயக்கத்திற்கு ஆதரவாக யார் பேசினாலும் மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததற்காக தொல்.திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் சட்டசபையை புறக்கணித்துள்ளனர். இந்த விஷயத்தில் காங்கிரஸ், திமுகவிற்கு எச்சரிக்கை கொடுக்க முடியுமா என்பது சந்தேகம் தான்.
தடை செய்யப்பட்ட பழனிபாபா அமைப்பிற்கு ஆதரவாக பேசி, துண்டு பிரச்சாரம் வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவர்கள் சொல்வார்களா. அப்படிச் சொன்னால் ஓட்டு வங்கி போய்விடும்.
விடுதலைப் புலிகள் பற்றி ஆதரவாக பேசும் திருமாவளவன் திமுக கூட்டணியில் இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்.
தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்கியுள்ளது. பாஜக தலைவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். தென்காசி சம்பவத்தை கண்டித்து இன்று போரூர் சாலை சந்திப்பு அருகே தேசிய இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் பாஜக சார்பில் நானும், தமிழிசை சவுந்திரராஜனும் கலந்து கொள்கிறோம்.
பயங்கரவாதத்தை ஒழிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும். தமிழக மீனவர்களின் உரிமையை பாதுகாக்கும் வகையில் கச்சத்தீவை மீட்டாக வேண்டும்.
பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எல்.கே.அத்வானி வரும் மார்ச் 9ம் தேதி சென்னை வருகிறார். அவருக்கு மிகச்சிறந்த வரவேற்பு அளிக்கப்படும். அன்றைய தினம் சென்னையில் நடைபெறும் மாபெரும் பொதுக் கூட்டத்தில் அத்வானி உரையாற்றுகிறார். எந்த இடத்தில் எப்போது பொதுக்கூட்டம் என்பது பின்னர் அறிவிக்கப்படும்.
நரேந்திர மோடி சென்னை வந்தபோது, நட்புரீதியில் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். நாட்டை பாதிக்கும் முக்கிய விஷயங்கள் குறித்தும் அவர்கள் பேசி இருக்கிறார்கள். அதன்படி பார்த்தால் பாஜக, அதிமுக கருத்து ஒன்றாகவே இருப்பது தெரிய வருகிறது.
பாஜக தேசிய பொதுக்குழுக் கூட்டத்தில் தமிழக பாஜக கூட்டணி பற்றி எதுவும் பேசவில்லை. அவசரப்பட்டு எந்த கட்சியும் கூட்டணி பற்றி முடிவெடுப்பதில்லை.
தை மாதம் முதல் தேதியை தமிழ்புத்தாண்டு என அறிவித்துள்ளார்கள். ஜனவரி 1ம் தேதி சர்ச்சுக்கு செல்லும் கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்துவிட்டு, ஹோட்டல்கள், தெருக்களில் காட்டுமிராண்டித்தனமாக நடக்கும் ஆங்கில புத்தாண்டை தடை செய்யாமல், மக்கள் அமைதியாக கொண்டாடும் சித்திரை திருநாளுக்கு எதிராக இப்படி அறிவித்துள்ளனர். இதனை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்.
நம்நாடு பழம்பெரும் நாடு, 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் கால கணக்கை கணித்துள்ளனர். வராகநிகிரர் தயாரித்ததைத் தான் நவீன விஞ்ஞானிகளும் ஆதாரமாக பயன்படுத்துகின்றனர். சந்திரன், சூரியன் அடிப்படையில் கால கணக்கு கணக்கிடப்படுகிறது.
தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் சித்திரை 1ம் தேதி புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் சந்திரனை மையமாக கொண்டு காதி என்று புத்தாண்டை கொண்டாடுகிறார்கள். இது விஞ்ஞானரீதியான கணக்காகும்.
திருவள்ளுவர் எந்த தேதியில் பிறந்தார் எனத் தெரியாது. இந்த ஆண்டு கலியுகத்தின் 5119வது ஆண்டாகும்.
வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி 5120வது ஆண்டு பிறக்கிறது. இதில் எந்த குழப்பமும் இல்லை. தமிழ் புத்தாண்டு பிடிக்கவில்லை எனக் கூறுபவர்கள் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி போன்ற மாதங்களையும் பிடிக்கவில்லை எனக் கூறுவார்களா.
நாட்டை திசை திருப்பவும், சரித்திரத்தில் இடம் பெறவும், நாட்டை துண்டாடும் முயற்சியாகவும் தமிழ்ப் புத்தாண்டை மாற்றியுள்ளார்கள். முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள், நாம் தான் புத்திசாலிகள், பகுத்தறிவாளர்கள் என்று சொல்பவர்கள் ஏமாந்து போவார்கள் என்றார் இல.கணேசன்.
வி.எச்.பி.யும் எதிர்ப்பு:
புதிய தமிழ்ப் புத்தாண்டு அறிவிப்புக்கு விஸ்வ இந்து பரிஷத் அமைப்பும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்த அமைப்பின் சர்வதேச செயல் தலைவர் வேதாந்தம் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக அரசின் முடிவு கண்டனத்துக்குரியதாகும்.
இது கருணாநிதியின் அடுத்த அரசியல் ஸ்டண்ட் அறிவிப்பாகும்.
தை முதல் நாள் இந்தியா முழுவதும் மகர சங்கராந்தி ஆக அனுசரிக்கப்படுகிறது. எனவே இதை தமிழர்களின் தனிப் பெரும் நாளாக கருத முடியாது. மேலும், தற்போது அமலில் உள்ள சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பது, அறிவியல்பூர்வமானது, கோள்களின் போக்கை வைத்து கணிக்கப்பட்டதாகும்.
எனவே முதல்வர் கருணாநிதியின் அறிவிப்பால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை.
மக்களின் கருத்தைக் கேட்காமல் தன்னிச்சையாக கருணாநிதி வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பை மக்கள் ஏற்க மாட்டார்கள். எனவே உடனடியாக இந்த முடிவை அவர் திரும்பப் பெற வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications