புலிகளை ஒடுக்க கடும் நடவடிக்கை: பீட்டர் அல்போன்ஸ்
சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத்தை தமிழகத்தில் ஊடுறுவ அனுமதிக்காமல் கடும் நடவடிக்கை எடுத்து ஒடுக்க வேண்டும் என சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் வலியுறுத்தினார்.
தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கொறடா பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில்,
மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே அணி ஆட்சியில் இருப்பதால் பல்வேறு திட்டங்கள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளன. எனது தொகுதியான கடையநல்லூரில் கொடிக்குறிச்சி ஊராட்சிக்கு மட்டும் கடந்த ஒரு ஆண்டில் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் நிதியுதவி கிடைத்துள்ளது.
ஒரு ஊராட்சிக்கே இவ்வளவு நிதி என்றால், மற்றவற்றுக்கு எவ்வளவு நிதி கிடைத்திருக்கும் என்று கணக்கு போட்டுக் கொள்ளலாம். தமிழகம் அடைந்துள்ள இத்தகைய முன்னேற்றத்திற்கு மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கருத்துடைய அரசுகள் ஆட்சியில் இருப்பதுதான் காரணம்.
சேது சமுத்திர திட்டம் தமிழகத்திற்கு வாராது வந்த மாமணியாக உள்ளது. அந்த திட்டத்தை நிறைவேற்ற விடாமல் நிர்பந்தங்கள் செய்யப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ராமர் என்ற உணர்வை மதிக்கிறோம். யாரையும் ஊனப்படுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை. முதலமைச்சர் கூட அந்த கால்வாய்க்கு ராமர் பேரை வைத்துக் கொள்ளலாமே என்று கூறியுள்ளார். இதைவிட வேறு என்ன பெருமை ராமருக்கு செய்ய முடியும்.
மதவாத சக்திகள் இதில் குறுக்கே வருவது தான் சந்தேகமாக உள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள துறைமுகங்களை வளர்ப்பதற்காக தூத்துக்குடி துறைமுகத்தை தேய செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் மதவாத சக்திகள் செயல்படுகின்றனவோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த திட்டத்தை அனைவரும் சேர்ந்து செயல்படுத்த வேண்டும்.
விடுதலைப்புலிகளை பொறுத்தவரை அவர்களை எதிர்ப்பதற்கு எங்கள் தலைவர் ராஜீவ் காந்தி கொலை மட்டுமே காரணம் அல்ல. காங்கிரசின் வீர வரலாறே எங்கள் தலைவர்கள் கொல்லப்படுவது தான். அந்த மரணங்களுக்காக நாங்கள் யாரையும் வெறுக்கவில்லை.
ஆனால் தமிழகத்தில் தீவிரவாதம் வேரூன்றிவிடக்கூடாது என்பது தான் எங்களது நோக்கமாகும். இரும்புக் கரம் கொண்டு தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும். விஷ நாகம் போல ஊடுருவும் தீவிரவாதம் நம்மை கடிக்காமல் இருக்க கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்றார் பீட்டர்.


Click it and Unblock the Notifications
