சென்னையில் ஹூண்டாயின் 2வது தொழிற்சாலை துவக்கம்

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் மோட்டார் தொழிற்சாலை விரிவாக்கப்பட்டுள்ளது. இதன் இரண்டாவது உற்பத்திப் பிரிவை முதல்வர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார்.
இந் நிலையில் இன்று காலை ஹூண்டாய் நிறுவன தொழிலாளர்கள் பூந்தமல்லி, குமணன்சாவடி உள்ளிட்ட முதல்வர் செல்லும் பாதையில் கூடினர். முதல்வரிடம் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுக்க அவர்கள் குழுமினர்.
ஆனால் அதை போலீஸார் அனுமதிக்கவில்லை. கலைந்து போகுமாறு கூறினர். ஆனால் தொழிலாளர்கள் அதை ஏற்கவில்லை. இதையடுத்து போலீஸார் அனைவரையும் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
கம்யூனிஸ்ட் கண்டனம்:
இந்த கைது நடவடிக்கையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கைதை சிஐடியூ மாநில பொதுச் செயலாளர் செளந்தரராஜன் கண்டித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைதியான முறையில் கூடி முதல்வருக்கு வரவேற்பு கொடுக்கவே தொழிலாளர்கள் திரண்டிருந்தனர். அவர்களை போலீஸார் கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது. முதல்வர் கருணாநிதி இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு தொழிலாளர்களை விடுவிக்க உத்தரவிட வேண்டும்.
தங்களது தொழிலாளர்களையே, தொழிற்சாலை தொடக்க விழாவில் பங்கேற்க ஹூண்டாய் நிறுவனம் தடை விதித்துள்ளது. 500க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தொழிலாளர்களின் ஜனநாயக உரிமையை நசுக்கும் செயல் இது. போலீஸார் தொழிலாளர்களை குண்டுக்கட்டாக தூக்கி போட்டு கைது செய்து கொண்டு சென்றுள்ளனர். ஹூண்டாய் நிர்வாகமும் இதற்கு உடந்தை. இந்த அடக்குமுறைக்கு முதல்வர் கருணாநிதி உடனடியாக முடிவு கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார் செளந்தரராஜன்.
தொழிற்சங்கம் அமைக்க அனுமதி மறுப்பு:
ஹூண்டாய் நிறுவனத் தொழிலாளர்கள் சங்கம் அமைப்பதற்கு ஹூண்டாய் நிர்வாகம் அனுமதி மறுத்து வருகிறது. இதனால் தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. சமீபத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு வெளியே தொழிலாளர்கள் சிஐடியூ தொழிற்சங்க கொடியை நிறுவ முயன்றபோது போலீஸார் தலையிட்டு கைது செய்தனர் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் முதல்வர் வரும் பாதையில் திரண்ட நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டது.
இரண்டாவது பிரிவு தொடக்கம்:
ஹூண்டாய் நிறுவனத்தின் இரண்டாவது பிரிவு 1 பில்லியன் டாலர் முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுதோறும் மேலும் 3 லட்சம் கார்களைத் தயாரிக்க ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.
இதனால் சென்னையில் ஹூண்டாய் கார்களின் தயாரிப்பு ஆண்டுக்கு 6 லட்சமாக உயரவுள்ளது.
தென் கொரியாவைச் சேர்ந்த இந்த நிறுவனம் கடந்த 1998ம் ஆண்டு இந்தியாவில் காலடி எடுத்து வைத்தது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய கார் சந்தையில் மிக முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டதோடு பல இந்திய, வெளிநாட்டு கார் நிறுவனங்களுக்கு பெரும் போட்டியை தந்து வருவது குறிப்பிடத்தக்கது.
நானோவால் பாதிப்பில்லை:
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய ஹூண்டாய் விற்பனைப் பிரிவின் துணைத் தலைவர் அரவிந்த் சக்ஸேனா, அதிக விலை கொடுத்தாலும் நல்ல வசதியான கார்களை வாங்க வாடிக்கையாளர்கள் தயாராக உள்ளனர். இதனால் நானோ காரால் எங்களுக்கு பாதிப்பு வராது என்றார்.












Click it and Unblock the Notifications