துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி - மே. வங்கத்தில் பந்த்
கொல்கத்தா: பார்வர்ட் பிளாக் கட்சியினர் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதைக் கண்டித்து இன்று மேற்கு வங்க மாநிலத்தில் அக்கட்சி சார்பில் பந்த் நடத்தப்பட்டது.
மேற்கு வங்கம், கூச் பிகார் மாவட்டத்தில் பார்வர்ட் பிளாக் கட்சியின் விவசாயப் பிரிவிவைச் சேர்ந்தவர்கள் ரேஷன் வசதி மற்றும் வேலை கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இவர்களை கலைப்பதற்காக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த 6 பேர் பரிதாபமாக இறந்தனர். 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதைக் கண்டித்து மேற்குவங்க மாநிலத்தில் இன்று 24 மணிநேர முழு அடைப்பு நடத்தப் போவதாக பார்வர்டு பிளாக் கட்சி அறிவித்தது. அதன்படி இன்று காலை 6 மணிக்கு பந்த் துவங்கியது.
இதனால் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. தனியார் வாகனங்கள் எதுவும் இயங்கவில்லை.
ஹவுரா - சியால்டா இடையே ரயில் தண்டவாளத்தில் பார்வர்டு பிளாக் கட்சியினர் தடுப்புகளை போட்டிருந்ததால், இன்று முக்கிய ரயில்கள் எதுவும் இயக்கப்படவில்லை. ஆனால் விமான போக்குவரத்து மட்டும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் செயல்பட்டது.
ஒரு சில இடங்களில் அரசு பேருந்துகள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் ஓடுகின்றது.
துப்பாக்கிச்சூடு நடந்த கூச் பிகார் மாவட்டத்தில் பந்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications