ஆபாசப் பட வழக்கு: டாக்டர் பிரகாஷ் குற்றவாளி!

சென்னை அருகே உள்ள நெற்குன்றத்தைச் சேர்ந்த முடநீக்கியல் நிபுணர் டாக்டர் பிரகாஷ் அண்ணாநகரில் மருத்துவமனை நடத்தி வந்தார். அங்கு சிகிச்சைக்கு வரும் பெண்களை மிரட்டி, ஆபாச படம் எடுத்து இணைய தளத்தில் வெளியிட்டு பணம் சம்பாதித்தாக அவர் மீது புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த கணேசன் என்ற வாலிபர் கடந்த 2001 ஆம் ஆண்டு வடபழனி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததையடுத்து, டாக்டர் பிரகாஷ் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு உடந்தையாக இருந்ததாக வார்டு பாய் சரவணன், கார் டிரைவர் விஜயன், எக்ஸ்ரே தொழில்நுட்பாளர் ஆசிப், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் நிக்சன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப் பட்டன. இதையடுத்து ஐந்து பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நிக்சன் மட்டும் கைதான மூன்று மாதங்களில் ஜாமீனில் வெளியே வந்தார். மற்ற நான்கு பேரும் கடந்த 6 வருடங்களாக சிறையில் அடைக்கப் பட்டு இருந்தனர். இவர்களில் பிரகாஷை தவிர மற்ற மூவருக்கும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. டாக்டர் பிரகாஷின் ஜாமீன் மனுவை ஆறாவது முறையாக நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கு விசாரணை சென்னை 5வது விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி ராதா முன்பு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், இன்று நீதிபதி தனது தீர்ப்பை அறிவித்தார்.
இதையொட்டி பிரகாஷ் உள்ளிட்ட ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆர்படுத்தப்பட்டனர்.
அப்போது நிக்சனைத் தவிர மற்ற நான்கு பேரையும் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். நிக்சன் விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
டாக்டர் பிரகாஷ், கற்பழிப்பு மற்றும் கொலை முயற்சி வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அதேசமயம், ஆள் கடத்தல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், விபச்சாரம், கொலை மிரட்டல், பெண்களை தவறாக சித்தரித்தல், ஆயுத சட்டம் உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் குற்றவாளி என நீதிபதி அறிவித்தார்.
வார்டு பாய் சரவணன், கார் டிரைவர் விஜயன், எக்ஸ்ரே தொழில்நுட்பாளர் ஆசிப் ஆகியோர் ஆள் கடத்தல், சதி மற்றும் உடந்தையாக செயல்பட்டது, விபச்சார தடுப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றவாளிகள் என நீதிபதி ராதா தெரிவித்தார்.
தீர்ப்புக்குப் பின்னர் நீதிபதியிடம் டாக்டர் பிரகாஷ் ஒரு கோரிக்கை வைத்தார். அதில், ஆறு வருடம் மூன்று மாதங்களாக சிறையில் இருந்து வருகிறேன். என்னுடைய தாயார் உடல்நலம் பாதிக்கப்பட்டு பாலக்காடு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அருகில் இருந்து பணிவிடை செய்ய வேண்டும். எனவே, குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மற்ற மூவரும், குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து அரசு தரப்பு வழக்கறிஞர் தென்கொடி நெல்சன் கூறுகையில், சமுதாயத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்து பெண்களின் பெருமைக்கு களங்கம் விளைவித்துள்ள நான்கு பேருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார்.
அதன் பின்னர் பிரகாஷ் உள்பட நான்கு பேரையும் சிறைக்குக் கொண்டு செல்ல நீதிபதி உத்தரவிட்டார். இவர்களுக்கான தண்டனை நாளை அறிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications