கோவை குண்டுவெடிப்பு-பாஜக அஞ்சலி கூட்டத்துக்கு போலீஸ் தடை
கோவை: கோவை குண்டு வெடிப்பு தினத்தையொட்டி பாஜக சார்பில் நடக்க இருந்த பொதுக் கூட்டத்துக்கு போலீசார் தடை விதித்துவிட்டனர்.
கோவையில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி பாஜக தலைவர் அத்வானியின் வருகையின்போது தொடர் குண்டு வெடிப்புகள் நடந்தன. இதில் 58 பேர் பலியாயினர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த தினத்தையொட்டி வரும் 14ம் தேதியன்று மலரஞ்சலி செலுத்தி பிரார்த்தனை பொதுக் கூட்டம் நடத்த பாஜக திட்டமிட்டது. கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் மாலை 5 மணிக்கு மலரஞ்சலி மற்றும் பிரார்த்தனை பொதுக்கூட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், இந்தக் கூட்டத்தால் மதரீதியிலான மோதல் உருவாகலாம் என உளவுப் பிரிவு எச்சரித்ததையடுத்து இக் கூட்டத்துக்கு போலீஸார் திடீரென தடை விதித்துள்ளனர்.
இதுகுறித்து கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாரதீய ஜனதா கட்சி கூட்டம் நடத்த முடிவு செய்துள்ள இடம் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளுக்கு காவல் துறை அனுமதியில்லாத, அங்கீகரிக்கப்படாத இடமாகும். மேலும் சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொண்டு மேற்படி இடத்தில் அந்நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
போலீசாரின் இந்த உத்தரவுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications