எம்ஜிஆர் என்னிடம் சத்தியம் வாங்கினார்-ஜெ திடீர் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:எம்.ஜி.ஆர். மறைவதற்கு முன் தன்னிடம் அதிமுகவையும் தொண்டர்களையும் நீ காப்பாற்ற வேண்டும் என்றும், எந்த சோதனை வந்தாலும், அவர்களுக்கு நீ துணையாக இருக்க வேண்டும் என்றும் சத்தியம் வாங்கியதாக அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அதிமுக பொதுக்குழுவில் ஜெயலலிதா பேசியதாவது:

அதிமுகவின் செல்வாக்கு இம்மியளவு கூட குறையவில்லை. இன்று நிதர்சனமான உண்மை என்னவென்றால், தமிழ்நாட்டில் அதிமுக என்ற பெயரைச் சொல்லாமல், ஜெயலலிதா என்ற பெயரைச் சொல்லாமல் யாராலும் அரசியல் நடத்த முடியாது. அது பழைய கட்சியாக இருந்தாலும் சரி, காளான்கள் போல் முளைக்கும் சிறிய புதிய கட்சிகளாக இருந்தாலும் சரி, ஜெயலலிதா என்ற பெயரைச் சொல்லாமல் அரசியல் நடத்தச் சொல்லுங்கள் பார்ப்போம்.

அண்மையில் நடந்த திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் 9 தீர்மானங்கள் என்னை பற்றிதான். அவர்கள் ஆட்சியில் இருக்கலாம். நாம் ஆட்சியில் இல்லாத நம்மை கண்டு அவர்கள் மிரண்டு போயிருக்கிறார்கள்.

எதிர்காலம் உள்ள ஒரே அரசியல் கட்சி அதிமுக தான். மகத்தான ஒளிமயமான எதிர்காலம் உள்ள ஒரே கட்சி அதிமுக தான். இன்னும் சில காலத்தில் பழைய கட்சிகள் எல்லாம் சுக்கு நூறாகி விடும். காளான் போன்று முளைத்த புதிய கட்சிகள் இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.

ஒவ்வொரு கலாசாரத்துக்கும் ஒரு புராணம் உண்டு. கதைகள் வேறாக இருந்தாலும் அடிப்படை கருத்து ஒன்று தான். நன்மையும், தீமையும் மோதும்போது நன்மை வெற்றி பெறும் என்ற கருத்து சொல்லப்பட்டிருக்கும். ராமாயணத்தில் ராமபிரான், ராவணன் என்ற ராட்சதனை வென்றதாக சொல்லப்பட்டிருக்கிறது.

ராமனும்.. ராவணனும்..:

வால்மீகி எழுதிய ராமாயணத்தில் ராமன் 14 ஆண்டுகள் காட்டில் இருந்தான். ஆனால் புதிய ராமாயணத்தில் எம்.ஜி.ஆர். என்ற ராமன், ராவணனை (கருணாநிதி) 13 ஆண்டுகள் வனவாசம் அனுப்பினார்.

ஏதோ விதியின் விளையாட்டு என்றும் சொல்லலாம். அரசியல் விபத்து என்றும் சொல்லலாம். நம்முடைய ராமர் பிரான் சென்ற பிறகு எப்படியோ அதே ராவணன் மீண்டும் வந்து சிம்மாசனத்தில் அமர்ந்து விட்டார்.

ராமபிரானின் சீடர்களாகிய நாம் தொடர்ந்து அதே ராவணனை எதிர்த்து போராடிக்கொண்டு இருக்கிறோம். மிக விரைவில் நமக்கு வெற்றி கிடைக்கும். தீய சக்திகள் வீழ்த்தப்படும். 3 முறை முதலமைச்சர் ஆகி இருக்கிறேன். 3 முறை எனது தலைமையில் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதுவெல்லாம் மகத்தான சாதனை.

நான் ஆடம்பரங்களை விரும்புவதில்லை!!!!:

நமது வரலாறு முடியவில்லை. நீண்ட அற்புதமான எதிர்காலம் காத்திருக்கிறது. பிரம்மாண்டமான வெற்றி பெறப் போகிறோம். சுய நலம் இல்லாமல் அதிமுக மட்டும் தான் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறது.

எனது 60வது பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னார்கள். இதற்கு நன்றி கூறுகிறேன். எனது பிறந்த நாளை எப்போதுமே நான் கொண்டாட விரும்புவதில்லை. தொண்டர்களின் மகிழ்ச்சிக்காக கொண்டாடுகிறார்கள். எனது பிறந்த நாளை எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் கொண்டாட வேண்டும். வீண் ஆடம்பரம் கூடாது.

சமீபத்தில் முதல்வர் கருணாநிதிக்கு ஒரு விழா கொண்டாடப்பட்டது. அதற்கு ஆடம்பரமாக மின் விளக்கு போட்டு மின்சாரத்தை வீணாக செலவு செய்தார்கள். இதைப் பற்றி நான் அறிக்கை வெளியிட்டவுடன் கருணாநிதி ஆடம்பரம் வேண்டாம் என்று அறிக்கை விடுகிறார்.

இது காலம் கடந்த ஞானோதயம், எல்லா ஆடம்பரங்களையும் செய்து விட்டு இப்போது ஆடம்பரம் வேண்டாம் என்று சொல்வதை கண்டு மக்கள் ஏமாற மாட்டார்கள். இந்த ஆட்சியை கண்டு மக்கள் வெறுத்து விட்டார்கள். தேர்தல் எப்போது வந்தாலும் அதிமுகவுக்கு சாதகமாக ஓட்டுப் போட தயாராகி விட்டார்கள்.

எம்ஜிஆர் வாங்கிய சத்தியம்!!!:

புரட்சித் தலைவர் மறையும் முன்பு என்னிடம் கூறினார். எனக்கு நீ ஒரு சத்தியம் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறினார். என்ன என்று கேட்டேன். என் மறைவுக்கு பிறகு எந்தக் காரணத்தைக் கொண்டும் எந்த காரணத்தை முன்னிட்டும் எவ்வளவு சோதனை வந்தாலும் எவ்வளவு துன்பம் வந்தாலும் எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும், நீ என்னுடைய கழக தொண்டர்களை விட்டு போகக்கூடாது. எனது கழகத் தொண்டர்களுக்கு நீ துணையாக இருக்க வேண்டும். அவர்கள் உனக்குத் துணையாக இருப்பார்கள் என்று கூறினார்.

இன்று வரை புரட்சித் தலைவருக்கு நான் செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காகத்தான் இங்கே நின்று கொண்டு இருக்கிறேன். உங்களுடைய பொதுச் செயலாளராக நான் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறேன்.

அவருக்கு செய்த சத்தியத்தின்படி தான் நான் இந்த கழகத்தை காத்து வருகிறேன்.

எனக்கு சுய நல நோக்கம் கிடையாது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சரி மக்களுக்கு என்னென்ன நன்மை செய்ய முடியுமோ அவற்றை செய்துவிட்டுப் போகலாம் என்ற சிந்தனையோடு செயல்பட்டுக்கொண்டு இருக்கின்ற ஒரே தலைவர் நான்தான். மக்கள் அதை மறக்கவில்லை. மறக்கவும் மாட்டார்கள்.

தாயைப் போல....:

அதிமுக ஆட்சி நடந்தபோது ஒரு தாயைப் போல் இந்த மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு அவற்றை நிறைவேற்றினேன். ஏதோ ஒரு விபத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. மக்களுக்கு இப்போது உண்மை புரிந்து விட்டது. மக்கள் நம்மை ஆதரிக்க தயாராகி விட்டார்கள்.

இந்தியாவை ஆள்வோம்..:

எனவே நிச்சயம் மீண்டும் மக்கள் ஆதரவுடன் ஆட்சிக்கு வருவோம். தமிழ்நாட்டை ஆளுவோம். அதுமட்டும் அல்ல இந்தியாவையும் ஆளுவோம்.

தமிழுக்காக பாடுபட்ட ஜெயலலிதா!!

பொதுக் குழுவில் அன்னை தமிழ் காக்க ஜெயலலிதா பல முயற்சிகளை எடுத்துள்ளார் என்றும் அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக் குழுவில் பங்கேற்க வந்த ஜெயலலிதாவை அலங்கரிக்கப்பட்ட குதிரைகள்,யானைகளில் தொண்டர்கள் அதிமுக கொடியேந்தி அணிவகுத்து வரவேற்றனர். தாரை தப்பட்டை, பொய்க்கால் குதிரை, கிராமிய நடனங்களுடன் வானகரம் மெயின் ரோட்டில் இருந்து மண்டபம் வரை ஜெயலலிதாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

போயஸ் தோட்டத்தில் ஆரம்பித்து வழியெங்கும் அதிமுக கொடி, தோரணங்கள், வரவேற்பு பேனர்கள் கட்டப்பட்டிருந்தன.

ஆனால், ஜெயலலிதா ஆடம்பரங்களை சுத்தமாகவே விரும்புவதில்லை!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+