பெட்ரோல் விலை உயர்வு-ஜெ, வைகோ கண்டனம்
சென்னை: ஏழாவது முறையாக பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளதன் மூலம் ஏழை, எளிய மக்களை மத்திய அரசு வதைத்துள்ளதாக அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
திமுக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சி பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் கூட ஆகாத நிலையில், ஏழு முறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு வேதனையை அளித்திருக்கிறது.
டீசல் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான அச்சாணி. டீசல் விலை உயர்வின் காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் பாதிக்கப்படும். எல்லா பொருட்களின் விலையும் உயர்ந்து, சாதாரண மக்களை கடுமையாக பாதிக்கும். பாசனத்திற்கான டீசல் பம்ப் செட்டுகளை பயன்படுத்தும் விவசாயிகள் , வியாபாரிகள் என அனைவரும் பாதிக்கப்படுவார்கள்.
ஆனால்,மத்திய அரசு இதைப்பற்றியெல்லாம் துளி கூட சிந்திக்காமல் தற்போது ஏழாவது முறையாக டீசல், பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளது.
மத்திய அரசு ஆயத் தீர்வை, சுங்கத் தீர்வை மற்றும் பெட்ரோலியத்தின் மீது விதிக்கப்படும், செஸ் வரி ஆகியவற்றை குறைத்தாலே பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளின் உயர்வை தடுத்திருக்க முடியும். ஆனால், இதையெல்லாம் மத்திய அரசு சிந்திக்க தயாராக இல்லை என ஜெயலலிதா கூறியுள்ளார்.
வைகோ கண்டனம்:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பெட்ரோல் விலையையும், டீசல் விலையையும் உயர்த்தியுள்ள மத்திய அரசின் முடிவு பொது மக்களை கடுமையாக வாட்டி வதைக்கப் போகும் ஒட்டு மொத்த விலை உயர்வுக்கு வழி வகுக்கும். ராக்கெட் வேகத்தில் ஏறி வருகிற விலைவாசி உயர்வால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கும், துன்பத்திற்கும் ஆளாகியுள்ளனர்.
இந் நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்கள் நலனுக்கு எதிரான நியாயமற்ற நடவடிக்கையாகும். இந்த விலையேற்றத்தால் ஏற்கனவே துயரத்தில் வாடும் விவசாயிகள் மேலும் அல்லலுக்கு ஆளாவர்.
சுங்க வரி, இறக்குமதி வரி, கலால் வரி ஆகிய வரிகளைக் குறைத்து இந்த விலையேற்றத்தை மத்திய அரசு தடுத்திருக்க முடியும். ஆனால் மத்திய பட்ஜெட்டை அறிவிப்பதற்கு முன்னால் இந்த பாரத்தை மக்கள் மீது சுமத்தி விட்டு மக்களை ஏமாற்றி விடலாம் என்று மத்திய அரசு கருதுகிறது.
கடுமையான விலைவாசி ஏற்றத்தால் மத்திய, மாநில அரசுகள் மீது மிகுந்த அதிருப்தியும் ஆத்திரமும் கொண்டுள்ள பொது மக்கள் இதற்கெல்லாம் சேர்த்து சரியான பாடம் கற்பிப்பார்கள்.
பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசுக்கும், இந்த முடிவுக்கு எதிர்ப்பு காட்டாத தமிழக அரசுக்கும் மதிமுக தனது கண்டனத்தை தெரிவிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications