சென்னை: ஓடும் ரயிலில் கத்தியால் தாக்கி கொள்ளை
சென்னை: ரயிலில் வழக்கறிஞரை கத்தியால் வெட்டி ரூ. 75,000 மதிப்புள்ள நகை, பணம், செல்போனை வாலிபர்கள் பறித்துச் சென்றனர்.
கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த அனில்குமார் (31) சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். தினமும் ரயில் மூலம் சென்னை வந்து செல்வார். நேற்றிரவு 11.15 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பும் ரயிலில் பயணித்தார்.
பயணிகள் மிக குறைந்த எண்ணிக்கையில் இருந்த நிலையில் அந்த ரயில் இரவு 12 மணிக்கு மீஞ்சூர் அருகே உள்ள ஏந்தியம்பாக்கம் நிலையத்தில் நின்றது. அப்போது 3 வாலிபர்கள் அந்தப் பெட்டியில் ஏறினர்.
மீண்டும் ரயில் புறப்பட்டவுடன் அந்த மூவரும் அனில்குமாரிடம் கத்தியைக் காட்டி பணம் கேட்டனர். அவர் தர மறுக்கவே அவரை கத்தியால் வெட்டினர்.
இதையடுத்து அவர் தன்னிடம் இருந்த ரூ.7,300யைக் கொடுத்தார். இதைத் தொடர்ந்து அவரிடமிருந்த தங்க செயின், மோதிரம், செல்போன் ஆகியவற்றை அந்தக் கும்பல் பறித்தது. அவற்றின மதிப்பு ரூ. 75,000 ஆகும்.
ரயில் மீஞ்சூரில் நின்றவுடன் அந்தக் கும்பல் தப்பி ஓடிவிட்டது. இதையடுத்து அனில்குமார் ரயில்வே போலீசில் புகார் செய்தார்.
ஒவ்வொரு ரயிலிலும் 2 ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டாலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
