Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'என்னை ராவணன் என்று சொல்பவர்கள் சீதைகளா?': கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: என்னை ராவணன் என்று சொன்னார்கள், அதற்காக நான் கவலைப்பட போவதில்லை. காரணம் அப்படிச் சொன்னவர்கள் சீதையும் அல்ல என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

செங்கல்பட்டில் முதல் சுயமரியாதை மாகாண மாநாடு நடந்ததன் 80வது ஆண்டு விழாவும், தை மாதம் முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டின் தொடக்கமாக அறிவித்ததற்காகவும், 240 பெரியார் சமத்துவபுரங்களிலும் தந்தை பெரியாரின் சிலைகளை நிறுவுவதற்காகவும் முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா திராவிடர் கழகம் சார்பில் செங்கல்பட்டில் நடந்தது.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கிய இந்த விழாவில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரும் பங்கேற்றார்.

இதில் தந்தை பெரியார் படிப்பகதுக்கான அடிக்கலை நாட்டிய முதல்வர் கருணாநிதி, 1929ம் ஆண்டு நடந்த சுயமரியாதை மாகாண மாநாட்டின் நினைவு வரலாற்று கல்வெட்டையும் திறந்து வைத்தார்.

பின்னர் கருணாநிதி பேசியதாவது:

கடந்த பல தேர்தல்களில் செங்கல்பட்டு மக்களை சந்திக்கும் வாய்ப்பை நான் பெற்றுள்ளேன். ஆனால், மாநாடு என்ற அளவில் மகத்தான திருவிழாவை வீரமணி ஏற்பாடு செய்துவிட்டார். இது திராவிட இயக்க பெருவிழா என்றுதான் சொல்லவேண்டும்.

1929ல் இங்கு சுயமரியாதை மாகாண மாநாடு நடந்தபோது நான் 5 வயது சிறுவனாக திருக்குவளையில் விளையாடிக்கொண்டிருந்தேன். இன்று செங்கல்பட்டில் மாநாடு நடந்த இடத்தில் நான் பாராட்டப்படுகிறேன், சிறப்பிக்கப்படுகிறேன். இதற்கெல்லாம் காரணம் பெரியார், அண்ணா வகுத்துக் கொடுத்த பகுத்தறிவு பாதையில் நான் நடப்பதால்தான் என்பதை மறந்துவிட மாட்டேன்.

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்கள் வகுத்து கொடுத்த பாதையில்தான் செல்கிறேன். ஆட்சியை காப்பாற்ற என்று சொல்ல மாட்டேன். எந்த லட்சியத்திற்காக இந்த ஆட்சி விளங்குகிறதோ, அந்த லட்சியத்தை காப்பாற்ற செயல்படுகிறேன். எனக்கு கேடயமாக வீரமணி விளங்குவதாக குறிப்பிட்டார். போர்க்களத்தில் எல்லா வடுக்களையும் தாங்கக்கூடிய கருவியாக கேடயம்தான் விளங்குகிறது.

அன்று சுயமரியாதை மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை இன்று கருணாநிதி ஆட்சியில் சட்டங்களாக கொண்டு வரப்பட்டுள்ளன. அதற்காக இன்று பாராட்டு நடத்துகிறோம் என்று வீரமணி குறிப்பிட்டார்.

எல்லா ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று அன்று போட்ட தீர்மானம் இப்போது தான் நிறைவேற்றப்படுகிறது. அதுமட்டுமல்ல, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்பது போன்ற பல்வேறு தீர்மானங்கள் இப்போது ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

எந்த நிலையிலும் சாவே வா வா என்று அழைத்தாலும், பெரியார் கொள்கைகள் தான் தெரியுமே தவிர, வேறு எதுவும் கண்களுக்கு தெரியாது. அவர்கள் வகுத்து கொடுத்த கொள்கைகள் தான் தெரியுமே தவிர வேறு எந்த கொள்கையும் தெரியாது.

ஆட்சியை கலைத்துவிடுவோம் என்று சிலர் மிரட்டுகிறார்கள். ராவணன் என்று சொன்னார்கள். இரணியன் என்று சொன்னார்கள். நான் இரணியனாகக்கூட இருக்கலாம். ஆனால் என்னுடைய கொள்கைக்கு மாறாக அவர்களை நான், பிரகலாதனாகத் தான் கருதினேனே தவிர, இரணியன் பிள்ளைகளாக கருதமாட்டேன்.

அதேபோல ராவணன் என்று சொன்னதற்காக நான் கவலைப்பட போவதும் இல்லை. அப்படி சொன்னவர்கள் சீதையும் அல்ல. குன்றக்குடி அடிகளாரை மேடையில் வைத்துக்கொண்டு இதற்கு மேல் விரிவாக எதையும் சொல்ல விரும்பவில்லை.

ஆயிரம், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிய போராட்டம் இன்னும் முடியவில்லை. நாம் முடித்துக்கொள்ள தயாரானால் கூட, அவர்கள் முடித்துக் கொள்ள தயாரா இல்லை. அவர்களால் போராட்டத்தை முடித்துக் கொள்ள முடியவில்லை. காரணம் அவர்கள் இயல்பு அப்படித்தான். ஒரு சமுதாயத்தை அமுக்கி அதன்மேல் நர்த்தனம் ஆடத்தான் விரும்புவார்கள். எல்லோரையும் சமத்துவமாக ஏற்கமாட்டார்கள்.

இன்றுள்ள சமத்துவபுரத்தில் ஆதி திராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், அய்யர், அய்யங்கார் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அங்கே வாழ்கிறார்கள். ஒரே இடுகாடு, ஒரு சுடுகாடு என்கிற அளவில் சாதி வித்தியாசமின்றி எல்லோரும் மனிதர்கள் என்ற அடிப்படையில்தான் அங்கே வாழ்கிறார்கள். 150க்கும் மேற்பட்ட சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சமத்துவபுரங்கள் அமைக்கப்பட உள்ளன.

இவைகள் எல்லாம் நிறைவேற்றக்கூடாது என்றுதான் ஆட்சியை கலை, ஆட்சியை கலை என்று துடிக்கிறார்கள். பெரியார் கொள்கைகளை பட்டவர்த்தனமாக நிறைவேற்றி விடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாகத்தான் ஆட்சியை கலை, ஆட்சியை கலை என்கிறார்கள்.

ஆட்சியை கலைப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. ஆட்சியை கலைத்துவிட்டு, வேடிக்கை பார்க்கக்கூடிய காரியம் அல்ல. இவர்கள் (ஜெயலலிதா) யாரிடத்தில் (காங்கிரஸ்) முறையிடுகிறார்களோ, அவர்கள் நன்றிக்கு இலக்கணம் தெரியாதவர்கள் அல்ல அவர்கள்.

அவர்களுக்கும் சட்டம் தெரியும், அரசியல் தெரியும். ஆகவே நான் யாரையும் பயமுறுத்தவில்லை. எச்சரிக்கையும் விடவில்லை. எனக்கு நானே அறை கூவலாகத்தான் விட்டுக்கொள்கிறேன்.

நான் ஒன்றும் முதலமைச்சருக்கு மகனாக பிறந்தவனும் அல்ல. நான் இசைவேளாளர் குலத்தில் பிறந்தவன். இசை வேளாளர் குலத்தில் பிறந்தவர் தான் ராஜரத்தினம் பிள்ளை. அவை எல்லாம் உங்களுக்கு தெரியும்.

ராஜரத்தினம் பிள்ளை அகில உலகில் புகழ்பெற்றவர். அவர் தேவகோட்டையில், காரைக்குடியில் நாதஸ்வரம் வாசிக்க செல்கையில், தோளில் துண்டை போட்டுக்கொண்டு நாதஸ்வரம் வாசிக்கையில் தங்களுக்கு மரியாதை குறைவு என்று எண்ணி, துண்டை எடுக்கச்சொன்னார்கள். எடுக்க மாட்டேன் என்று மறுத்தவர் ராஜரத்தினம் பிள்ளை.

அவர் எடுக்காதது மட்டுமல்ல, எந்த நாதஸ்வர கலைஞரையும் தவில் வித்வான்களையும் தோளில் போட்ட துண்டை இடுப்பில் கட்டக்கூடாது என்றும், அது சுயமரியாதைக்கு இழிவு என்றும், அதை தோளில் இருந்து இறக்க யாருக்கும் உரிமை இல்லை என்றும், எவனோ சொல்கிறான் என்பதற்காக எடுக்கக்கூடாது என்று முதலில் சொன்னவர் ராஜரத்தினம் பிள்ளை.

அதே போல் நாதஸ்வரம் வாசிப்பவர்கள் கிராப் வைக்கக் கூடாது, குடுமி வைக்க வேண்டும். அதேபோல தவில் வாசிப்பவர்களும் கிராப் வைக்கக்கூடாது, குடுமிதான் வைக்க வேண்டும். சுவாமி புறப்பாட்டின் போது உட்கார்ந்து கொண்டு வாசிக்கக்கூடாது. நின்று கொண்டுதான் வாசிக்க வேண்டும். இதெல்லாம் சுயமரியாதை சுடர் ஒளிவிடாத காலம்.

அந்த காலத்தில் இருந்த கொடுமைகள் எல்லாம், ராஜரத்தினம் பிள்ளை காலத்திற்கு பின்னால் மறைந்துள்ளது. சுயமரியாதைக்காரர்களாக தன்மானம் உள்ளவர்களாக ராஜரத்தினம் பிள்ளை போன்றவர்கள் மாற்றியிருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் அந்த உணர்ச்சியை ஊட்டியவர் தந்தை பெரியார்.

சுயநலத்திற்கும், சுயமரியாதைக்கும் உள்ள வேறுபாட்டை தெரிந்து கொள்ள வேண்டும். சுயமரியாதையை இழந்தவன் கோழையாகத்தான் வாழமுடியும். கோழையாக வாழ விரும்புகிறாயா? வீரனாக சாக விரும்புகிறாயா? என்று கேட்டால், உண்மையான தமிழன் நான் வீரனாகத்தான் சாக விரும்புகிறேன் என்று சொல்வான். அவன் தான் சுயமரியாதைக்காரன்.

நான் வாழ்ந்தால் போதும் என்று சொல்பவன் சுயமரியாதைக்காரன் அல்ல. இதைத்தான் ஆணித்தரமாக நம்மிடம் விதைத்தார்கள் தந்தை பெரியாரும், குருநாதர் அண்ணாவும் என்றார் கருணாநிதி.

விழாவில், பெரியார் படிப்பகத்துக்கு நிலத்தை நன்கொடையாக வழங்கிய அ.கோ.கோபால்சாமிக்கு முதல்வர் பரிசு வழங்கினார்.

மேடையில் திருமணம்-பெயர் மாற்றம்:

முன்னதாக மாநாட்டு மேடையில் செங்கல்பட்டு நகர திமுக செயலாளர் சதீஷ்பாபு-ரேவதியின் திருமணத்தை சுயமரியாதை திருமணமாக கருணாநிதி நடத்தி வைத்தார்.

அப்போது பேசிய கருணாநிதி. நான் இங்கே மணமகனுக்கு ஒரு வேண்டுகோளை வைத்து வாழ்த்துகிறேன். சதீஷ்குமார் என்ற அவர் பெயரை மாற்றி தமிழ் பெயர் சூட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார். தனது பெயரை மாற்றும்படி சதீஷ்குமார் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து அவர் இனி அன்புச்செல்வன் என்று அழைக்கப்படுவார் என அறிவித்தார் கருணாநிதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+