நாளை கூடுகிறது நாடாளுமன்றம்-29ல் படஜெட்
டெல்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் பரபரப்பான சூழ்நிலையில் நாளை கூடுகிறது. நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை ரயில்வே பட்ஜெட்டை லாலு பிரசாத் யாதவ் தாக்கல் செய்கிறார். 29ம் தேதி மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்கிறார்.
இந்த ஆண்டின் முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. முற்பகல் 11 மணிக்கு தொடங்கும் இக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உரையாற்றுகிறார்.
இதையடுத்து 26ம் தேதி ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். லாலு தாக்கல் செய்யும் 5வது பட்ஜெட் இது. மக்கள் பட்ஜெட்டாக இது இருக்கும் என லாலு ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
எனவே பயணிகளுக்கு பல்வேறு சலுகைகள், மாநிலங்களுக்கு ஏராளமான புது ரயில்கள், புதிய ரயில்வே திட்டங்கள் பட்ஜெட் அறிவிப்பில் இடம் பெறும் எனத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து 29ம் தேதி மத்திய பொது பட்ஜெட்டை ப.சிதம்பரம் தாக்கல் செய்கிறார். வருமான வரி கட்டுவோருக்கு சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இதில் இடம் பெறும் எனத் தெரிகிறது.
அடுத்த ஆண்டு தேர்தல் ஆண்டு என்பதால் ரயில்வே மற்றும் பொது பட்ஜெட்டில் பல்வேறு சலுகைக் குவியல் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இது ஒரு புறம் இருக்க இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் பல்வேறு பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் கூடுவதால் அதுகுறித்த எதிர்பார்ப்பும் அதிகமாகவே உள்ளது.
விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு, அணு சக்தி ஒப்பந்தம், ராஜ் தாக்கரேவால் ஏற்பட்டுள்ள சலசலப்பு என பல்வேறு பிரச்சினைகளுடன் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்த காத்திருக்கின்றன.
குறிப்பாக ராஜ் தாக்கரே விஷயத்தை லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளமும், முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடிக் கட்சியும் பெரிய அளவில் கிளப்ப காத்திருக்கின்றன.
இதேபோல அணு சக்தி விவகாரம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகிய பிரச்சினைகளை இடதுசாரிகள் பெரிய அளவில் கிளப்ப ஆயத்தமாக இருப்பதால் வழக்கம் போல இந்தக் கூட்டத் தொடரும் புயல் வீசும் களமாகவே இருக்கும் என்று தெரிகிறது.
பட்ஜெட் கூட்டத் தொடர் 3 மாதங்களுக்கு நடைபெறும். மார்ச் 9ம் தேதி கூட்டத் தொடர் முடிவடைகிறது.